விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

ஆகஸ்ட் 07 , 2017 , திங்கட்கிழமை, 

சென்னை : விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் 10-வது வார்டு திமுக செயலர் ஜி.ராஜேஷ் தலைமையில் 250 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் கே.பழனிசாமி வீட்டில் நேற்று காலை நடந்தது. அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர்பழனிசாமி கூறியதாவது:-

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குபெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும். அமைச்சர் விஜயபாஸ்கர் இதுகுறித்து டெல்லியில் பேசி வருகிறார். சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போதுமான மழை பொழிவு இல்லாததால்தான், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பணைகள் கட்ட 350கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விரைவில் அதிமுக-வின் இரு அணிகள் இணையும், எனவே கூடிய விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவை பார்க்கலாம். என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.