விலையில்லா கைப்பேசி; விவசாய, கல்விக் கடன்கள் ரத்து உள்ளிட்ட ஏராளமான புதிய திட்டங்களுடன் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை : முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

விலையில்லா கைப்பேசி; விவசாய, கல்விக் கடன்கள் ரத்து உள்ளிட்ட ஏராளமான புதிய திட்டங்களுடன் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை : முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

வெள்ளி, மே 06,2016,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார். அதில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் செல்போன் வழங்கப்படும், 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம், விவசாயிகளுக்கான அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும், வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச்  செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் 4 கிராம் தங்கம் இனி 8 கிராமாக அதாவது ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
 * அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும்.
 * கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர காலக் கடன், நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
 * நிகழாண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க் கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
 * உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
 * இப்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதனால், 100 யூனிட் வரை பயன்படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
 * கைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்டுகளாகவும், விசைத்தறிக்கான மின்சாரம் 750 யூனிட்களாகவும் உயர்த்தப்படும்.
 * தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி இணைப்பு பெற்றவர்களுக்கு செட்-டாப் பாக்ஸ் விலையின்றி வழங்கப்படும். பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், “வை-பை’ எனும் கம்பியில்லாத இணையதள வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
 * அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம் உருவாக்கப்படும். இதில் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சி பெறுவோருக்கு சுய தொழில் தொடங்க உதவிகள் வழங்கப்படும்.
 * வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகையானது 10-ஆம் வகுப்பு முடித்தோருக்கு ரூ.300-ம், பிளஸ் 2 முடித்தோருக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600 என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும்.
 * வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும்.
 * பணியிடங்களுக்கு மகளிர் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் கொடுக்கப்படும்.
 * அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை திருப்பிச் செலுத்தும் வகையில், ரூ.1,000 வரை சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய வட்டியில்லாக் கடன் அளிக்கப்படும். வாரம் ரூ.10 என்ற அளவுக்கு, திருப்பி செலுத்தலாம். இதன்படி வழங்கப்படும் அம்மா கார்டை பயன்படுத்தி அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளையும் செய்யலாம். அரசு கட்டணங்களையும், அரசின் அனைத்துச் சேவைகளையும் பெற இந்தக் கார்டை பயன்படுத்தலாம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
 * மடிக் கணினியுடன் கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதி
 * பம்பு செட்டுகளுக்கு 80 சதவீதம் மானியம்
 * மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக உயரும்.
 * விடுமுறையில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி
 * ரூ.5 கோடியில் அம்பேத்கர் அறக்கட்டளை
 * மண்பாண்ட-உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக் கால
 பராமரிப்பு உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கப்படும்
 * மீனம்பாக்கம்-செங்கல்பட்டு வரை உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம்.
 * அரசுத் துறை சேவைகள் இணையம்-கைப்பேசி மூலம் அளிக்கப்படும்.
 * ரூ.100 கோடியில் அம்மா ஈடு உத்தரவாத நிதியம் ஏற்படுத்தப்படும். குறு-சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஈடு ஏதுமின்றி கடன் பெறலாம்.
 * படிப்படியாக மதுவிலக்கு
 * லோக்-ஆயுக்த உருவாக்கப்படும்
 * புதிய கிரானைட் கொள்கை
 * அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர
 நடவடிக்கை.
 * வீடு கட்ட முன் பணம் ரூ.40 லட்சமாக உயரும்.
 * வழக்குரைஞர் சேம நலநிதி ரூ.7 லட்சமாக உயரும்.
பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி; தாலிக்கு 8 கிராம் தங்கம்
 தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகள்:-
 * தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ், காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
 * மகளிர்-குழந்தைகள் நலன் பேணும் வகையில், செறிவூட்டப்பட்ட ஆவின் பால் லிட்டர் ரூ.25 என்ற குறைந்த விலையில் வழங்கப்படும்.
 * திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராமில் இருந்து ஒரு சவரன் (8 கிராம்) என உயர்த்தி அளிக்கப்படும்.
 * மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9 மாதமாக அதிகரிக்கப்படும்.
 * பொங்கலுக்கு கோ-ஆப்டெக்ஸில் இருந்து துணிகள் வாங்கிக் கொள்ள ரூ.500-க்கான வெகுமதி கூப்பன் அளிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.