விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளரை மாற்ற கோரி தில்லியில் உண்ணாவிரதம் : மேல்புறத்தில் விஜயதரணி உருவபொம்மை எரிப்பு

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளரை மாற்ற கோரி தில்லியில் உண்ணாவிரதம் : மேல்புறத்தில் விஜயதரணி உருவபொம்மை எரிப்பு

திங்கள் , ஏப்ரல் 25,2016,

சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜயதரணியை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸார் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விளவங்கோடுமேல்புறத்தில் ஒரு பிரிவினர் விஜயதரணி எம்.எல்.ஏ. உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அண்மையில் வெளியிட்டது. இதில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட, தற்போதைய எம்எல்ஏவும் அகில இந்திய மகளிரணி காங்கிரஸ் பொதுச் செயலாளருமான விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னியாகுமரி (மேற்கு) மாவட்டச் செயலாளரும், விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்டவருமான கே.அஜி குமார் தலைமையில் தமிழக காங்கிரஸார் சிலர் தில்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து அஜி குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விஜயதரணிக்கு கட்சி மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் எம்எல்ஏவாக இருந்த 5 ஆண்டுகளில் வெறும் 55 நாள்கள் மட்டுமே தொகுதிப் பக்கம் வந்துள்ளார்.

தொகுதி மக்கள், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமெனில், அவரது உதவியாளரிடம் பணம் அளித்து, மனு அளிக்கக்கூடிய நிலைதான் இருந்து வந்துள்ளது.

விஜயதரணி சென்னையைச் சேர்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை தமிழக காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இது எங்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகமாகும்.

மேலும், கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், மீண்டும் விஜயதரணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் பெரும் சரிவை ஏற்படுத்தும். எனவே, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவருக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் வரை தில்லியில் எங்களின் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

இந்தநிலையில், நேற்று மாலை வேட்பாளர் விஜயதரணிக்கு எதிராக மேல்புறத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கண்டன கூட்டம் நடந்தது. கூட்டத்தில், காங்கிரஸ் மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஆமோஸ் தலைமை தாங்கினார், முன்னாள் மாநில இளைஞரணி செயலாளர் பிரேயர் பிரின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து, மாலை 6.45 மணியளவில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒருபிரிவினர் மேல்புறம் சந்திப்பில் கூடினர். அவர்கள் விஜயதரணி எம்.எல்.ஏ. உருவபொம்மையை எரித்து கோஷம் எழுப்பினர். இதில் சுமார் 50–க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.