விவசாயிகளுக்கும், குடிசைவாசிகளுக்கும் எதிரான மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்திற்கு கருணாநிதி ஆதரவா? முதலமைச்சர் ஜெயலலிதா கேள்வி

விவசாயிகளுக்கும், குடிசைவாசிகளுக்கும் எதிரான மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்திற்கு கருணாநிதி ஆதரவா? முதலமைச்சர் ஜெயலலிதா கேள்வி

செவ்வாய், ஏப்ரல் 12,2016,

தமிழகத்தில் விவசாயிகளும், குடிசைவாசிகளும் மின்திருட்டில் ஈடுபடுவதாக நினைக்கிறாரா? என்று கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா சூடான கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 3 மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்தை ஏற்கிறாரா? என்றும் விருத்தாசலத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கேள்விக்கணை தொடுத்துள்ளார்.

அடுத்த மாதம் 16-ம் தேதி தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து வான் வழியாகப் புறப்பட்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திற்கு சென்றடைந்த போது, அங்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், கழகப் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, சாலையின் இரு மருங்கிலும் மகளிர் திரண்டிருந்து அளித்த பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டு, எங்கு நோக்கினும் கடல் அலை போல் லட்சக்கணக்கில் குழுமியிருந்த மக்களுக்கு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை’ சின்னத்தைக் காண்பித்து, அனைவருக்கும் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி (தனி), புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோயில்; பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரம்பலூர் (தனி), குன்னம்; அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 13 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக அவர், விருத்தாச்சலம் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த போது பொதுமக்கள் கர ஒலி எழுப்பி அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். பதிலுக்கு முதல்வரும் இருவிரல் காட்டி கையசைத்தார். பின்னர் அவர் இந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

மின்சார வாரியத்தை சீரமைக்கக் கூடிய திட்டம் என மத்திய அரசு கொண்டு வந்துள்ள உதய் திட்டத்தில் தமிழக அரசு பங்கு பெறாதது குறித்து ஒரு சில மத்திய அமைச்சர்களும், திமுக தலைவர் கருணாநிதியும் தமிழக அரசை குறை கூறி வருகின்றனர். அனைந்திந்திய அளவில் தனியாரிடம் அதிக அளவில் மின் உற்பத்தி செய்யும் திறன் இருந்த போதும் பல மாநிலங்களில் மின் வெட்டு நிலவி வருகிறது. இதற்குக் காரணம் அந்த மின் பகிர்மான கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும், அவர்களால் வாங்கிய கடன் மற்றும் வட்டி வங்கிகளுக்கு செலுத்த இயலாததாலும், அவைகளால் மின்சாரம் வாங்க இயலவில்லை. தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் முழு செயல் திறனில் செயல்பட முடியாததால் அவர்களாலும் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த இயலவில்லை. எனவே, வங்கிகளும் இந்த கடன் தொகையை செயல்படாத சொத்தாக மாற்றிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மின்சார வாரியங்களின் கடன்களை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக் கொண்டால் மின்சார வாரியங்கள் மீண்டும் கடன் பெற்று மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு வழங்க இயலும் என்ற அடிப்படையிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே தான் இந்த திட்டம் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கும், வங்கிகளுக்கும் லாபகரமாக அமையும் என்றாலும், தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும்.

மாநில அரசால் மின் வாரியத்தின் கடன்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிதி பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் நிதி திரட்டலாம் என்றாலும், நிதிப் பற்றாக்குறை தொடர்பான நிதி பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை வரையறைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மட்டுமே தளர்வு செய்யப்படுவதால், அடுத்த ஆண்டிலிருந்து மாநில அரசால் கடன் எதையும் பெற இயலாது.
எனவே, வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செயல்படுத்த இயலாது. எனவே தான் இந்த கட்டுப்பாடுகள் 2 ஆண்டுகளுக்கு மட்டும் தளர்வு என்பதை மாற்றி அசல் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்தும் 15 ஆண்டுகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், மாநில அரசு எடுத்துக் கொள்ளும் கடன் தொகையில் மத்திய அரசும் பங்கு ஏற்று மானியம் வழங்கிட வேண்டும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் மின் வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்கும் பொருட்டு வங்கிகள் மூலம் கடன் பெற வகை செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யப்பட்டால் வங்கிகளிலிருந்து தமிழ் நாடு மின்சார வாரியம் பெற்றுள்ள 17,500 கோடி ரூபாய் கடனை மாநில அரசு எடுத்துக்கொள்ளும் என்றும் நான் தெரிவித்து இருந்தேன். மேலும் மின் வாரிய செலவுகளுக்கேற்ப மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகும். இது குறித்து விளக்கமாகவும், விரிவாகவும் அமைச்சர்கள் நத்தம் இரா. விசுவநாதன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பதில்  அளித்திருந்தாலும், திமுக தலைவர் கருணாநிதி இதில் விளக்கங்கள் இல்லை என்பது போல அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மின் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர்  கூறியுள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் கூறியது கருணாநிதிக்கு புரியவில்லை போலும். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது மின் மீட்டர்கள் இல்லாத காரணத்தால் மின் திருட்டும், மின் இழப்பும் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார். தமிழகத்தில் விவசாய பம்பு செட்டுகள் மற்றும் குடிசை மின் இணைப்புகளுக்கு மட்டுமே மின் மீட்டர்கள் பொருத்தப்படாத போது, மின் மீட்டர்கள் இல்லாததால் மின் திருட்டு ஏற்படுகிறது எனக் கூறுவது தவறு என அமைச்சர்கள் பதில் சொல்லியிருந்தனர். இதை கருணாநிதி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், விவசாயிகளும், குடிசைகளில் வசிப்பவர்களும் மின் திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள் என்று கருணாநிதி கூறுகிறாரா என்பதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும் அவர் தான் விளக்கிட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.