விவசாயிகளுக்கு புதிய சலுகைகள்,சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80% மானியம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

விவசாயிகளுக்கு புதிய சலுகைகள்,சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80% மானியம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , செப்டம்பர் 01,2016,

10 குதிரைத் திறன் கொண்ட சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும், ரூ.21 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீட்டில், 20 ஆயிரத்து 55 ஏக்கர் மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணைய முறை பரவலாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று  பேரவை விதி 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள்:

நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு இன்றியமையாததாகவும் விளங்கும் வேளாண்மைத் துறைக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வேளாண் துறைக்கும், விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் காரணமாகவே, 2015-16-ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தி 1 கோடியே 30 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் என உயர்ந்துள்ளது.

விவசாயக் கடன் பெற்ற விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் எங்களது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன் நடுத்தர கால வேளாண்மைக் கடன், மற்றும் பண்ணைச் சார்ந்த நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

விவசாயத் துறை சார்ந்த பின்வரும் புதிய அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

1. வேளாண்மையில் சூரிய சக்தியின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சூரிய சக்தியால் இயங்கும் 5 குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்ப் செட்டுகளை அமைத்திட, விவசாயிகளுக்கு 80 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2013-14-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், 2,130 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இதன் விளைவாக, 10,500 ஏக்கர் பாசன வசதி பெற்றுள்ளது. நிலத்தடி நீர் அதிக ஆழத்தில் உள்ள இடங்களில் 5 குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்பு செட்டுகள் இயக்க இயலாது.

எனவே தான் எங்களது தேர்தல் அறிக்கையில் ‘சூரிய சக்தியால் இயங்கும் விவசாய மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80 சதவீத மானியம் தொடர்ந்து வழங்கப்படும். 10 குதிரைத் திறன் வரையிலான மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மானியம் வழங்கப்படும்’ என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம். அதன்படி, இந்த ஆண்டு 10 குதிரைத் திறன் கொண்ட சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80 சதவீதம் மானியம் வழங்கப்படும். 500 விவசாயிகள் பயன் அடையும் வகையில் 21 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

2. வேளாண் பணிகளுக்கான இயந்திரங்களை அதிக விலை கொடுத்து வாங்க இயலாத விவசாயிகள், சாகுபடிக் காலங்களில் காலத்தே விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், பாசன நீர் ஆதாரத்தினை பெருக்கிட, குழாய் கிணறுகள் அமைத்திடவும், இயந்திரங்களையும் கருவிகளையும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 22 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் வாங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 60 முதல் 70 குதிரைத் திறன் கொண்ட 50 டிராக்டர்கள், அதற்கான இணைப்புக் கருவிகள், 20 பலவகை கதிரடிக்கும் இயந்திரங்கள், 10 சுழல் விசைத் துளைக் கருவிகள் ஆகிய வேளாண் இயந்திரங்கள் 21 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படும்.

3. வேளாண் பணியில் விவசாயத் தொழிலாளர்களின் பற்றாக்குறையினை களையும் வகையில் வேளாண் இயந்திரமயம் ஆக்குதல் திட்டத்தினை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 299 கோடியே 83 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. நெல் நடவு இயந்திரங்கள், பவர் டில்லர், சுழற் கலப்பை, களையெடுக்கும் கருவிகள், டிராக்டர் மற்றும் பவர் டில்லரால் இயக்கப்படும் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வாங்க நடப்பாண்டில், 31 கோடியே 6 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

4. மானாவாரி பயிர்கள் பருவ மழையை நம்பியே இருப்பதாலும், உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதாலும் மானாவாரி விவசாயிகளின் வருமானம் குறைவாகவே உள்ளது. எனவே, மானாவாரிப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும், பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

2015-2016 ஆம் ஆண்டில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வளர்ப்புடன் இணைந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறை மானாவாரி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது. எங்களது தேர்தல் அறிக்கையில், ‘மானாவாரி பயிர் சாகுபடியில் கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்பு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படும்’ என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம். அதனை செயல்படுத்தும் வகையில், இந்த ஆண்டு 21 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 20 ஆயிரத்து 55 ஏக்கர் மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணைய முறை பரவலாக்கப்படும்.

5. தமிழகம், பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் தேசிய அளவில் முக்கிய இடம் வகிக்கிறது. பூச்சிக் கொல்லியின் நச்சு இல்லாத பழங்கள் மற்றும் காய்கறிகள் உடல் நலனுக்கு உகந்ததாகும். எனவே, வேளாண் சுற்றுச்சூழல் சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்திகளை விவசாயிகள் பின்பற்றும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் 1,27,500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் 10 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

6. உயர் மதிப்புள்ள குடை மிளகாய், வெள்ளரி, தக்காளி இவற்றுடன் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கொய் மலர்களான ஜெர்பரா, ரோஜா, கார்னேஷன் மற்றும் லில்லியம் போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் பசுமைக் குடில்களில் பயிரிடப்படுகின்றன. நடப்பாண்டில் இத்திட்டம் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், 16 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

7. தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், விவசாயிகளுக்குத் தரமான, இனத் தூய்மையான நடவுச் செடிகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையிலும் அந்தந்த பகுதிகளில் தொழில்நுட்பங்களை விளக்கும் வகையிலும் தோட்டக்கலை பண்ணைகள் விளங்குகின்றன. இந்தப் பணிகளை சிறப்புற செய்யும் வகையில், கடலூர் மாவட்டம் – விருத்தாச்சலம், காஞ்சிபுரம் மாவட்டம் – மேல்கதிர்ப்பூர், திருச்சி மாவட்டம் – முதலைப்பட்டி, நாமக்கல் மாவட்டம் – படச்சோலை, வேலூர் மாவட்டம் – நவ்லாக் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் – சந்தையூர் ஆகிய ஆறு அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் 5 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும்.

8. விவசாயிகளுக்கு தரமான, இனத் தூய்மையான நடவுச் செடிகள் நியாயமான விலையில் கிடைத்திட தோட்டக்கலைப் பண்ணைகள் வழிவகை செய்கின்றன. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான தோட்டக்கலை நடவு செடிகளை, தங்களது சொந்த மாவட்டங்களிலேயே பெற்றுக்கொள்ள வகை செய்யும் விதமாக 5 மாவட்டங்களில் புதிய பண்ணைகளை அமைக்க எனது தலைமையிலான அரசு உத்தரவிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டில், திருப்பூர், அரியலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய தோட்டக்கலைப் பண்ணைகள் அமைக்கப்படும்.

9. அதிகரித்து வரும் வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு, எனது தலைமையிலான அரசால் புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலை, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஈச்சங்கோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழவச்சனூர் ஆகிய மூன்று இடங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மூன்று கல்லூரிகள் மற்றும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில், 49 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் மற்றும் தேர்வு மையங்கள் ஆகியவை கட்டப்படும்.

தற்போது நான் அறிவித்துள்ள இந்த திட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க மேலும் வழிவகை ஏற்படும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.