விவசாயிகள் பயன்பெறும் புதிய பயிர்க்காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.500 கோடி மானியம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

விவசாயிகள் பயன்பெறும் புதிய பயிர்க்காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.500 கோடி மானியம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, ஜூலை 16,2016,

சென்னை  – மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்துக்கான மானியமாக ரூ.500 கோடியை தமிழக அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தென்னை மரக் காப்பீட்டுத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.,

வேளாண் தொழிலை மேற்கொண்டுள்ள உழவர் பெருமக்களின் வாழ்வு வளம் பெற பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. விவசாய இடுபொருட்களை உரிய காலத்தே வழங்குதல், தரமான விதைகளை உற்பத்தி செய்து வழங்குதல், சிறு-குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு75 சதவீத மானியம் என்ற அடிப்படையில் நுண்ணீர் பாசனத் திட்டங்கள், வேளாண் தொழிலாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் வேளாண் இயந்திர மயமாக்கும் திட்டம், புதிய உத்திகளையும், தொழில்நுட்பங்களையும் விவசாயிகள் கடைபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் என பல்வேறு உத்திகளை விவசாய மேம்பாட்டிற்காக எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன்காரணமாகவே, ஒவ்வொரு ஆண்டும் உணவு தானிய உற்பத்தியில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. எனவே தான், உணவு தானிய உற்பத்தியில் கடந்த ஆண்டு இதுவரை இல்லாத உயர் அளவாக 1 கோடியே 30 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவை தமிழ்நாடு எட்டியுள்ளது.  விவசாயக் கடன் பெற்ற விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் எங்களது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு-குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர கால வேளாண்மைக்கடன் மற்றும் பண்ணைச் சார்ந்த நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எங்களது தேர்தல் அறிக்கையில், மேம்படுத்தப்பட்ட பயிர்க் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியையும் நான் அளித்திருந்தேன்.

இதன்அடிப்படையில் மாநில அரசின் பங்களிப்புடன் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்திட நான்உத்தரவிட்டுள்ளேன். இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி, இழப்பை வரையறை செய்ய தற்போது ஃபிர்கா அளவில் கணக்கெடுக்கப்படுவதற்கு மாறாக, கிராம அளவில் கணக்கெடுக்கப்படும். இதன் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் பாதிப்பு துல்லியமாக கணக்கிடப்பட்டு இழப்பீட்டுத் தொகையினை விவசாயிகள் பெற இயலும். இது வரை மகசூல் இழப்பு அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இழப்பீடு, இந்த புதிய திட்டத்தின்படி, விதைப்பு பொய்த்தல், நடவு செய்ய இயலாத நிலை, பயிர்விதைப்பு முதல் அறுவடை வரையிலான காலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடு, அறுவடைக்குப்பின் வயல் அளவில் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட அனைத்து இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இழப்பீட்டினை கணக்கிடும் ஈட்டுறுதி நிலை அதிக பாதிப்புக்குள்ளாகும் ஒன்பது மாவட்டங்களுக்கு 60 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், இந்த மாவட்ட விவசாயிகள் அதிக இழப்பீட்டுத் தொகை பெறஇயலும்.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு வேளாண் பயிர்களுக்காக செலுத்தப்பட வேண்டிய காப்பீட்டுக் கட்டணத்தில், ரபி பருவத்திற்கு, அதாவது அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான நடவுக் காலத்திற்கு 1.5 சதவீதம் என்ற அளவிலும், காரிப்பருவம், அதாவது ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்திற்கு 2 சதவீதம் என்ற அளவிலும், விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். எஞ்சிய காப்பீட்டுக் கட்டணத்தில் 50 சதவீதம் மத்திய அரசும், 50 சதவீதம் மாநில அரசும் வழங்கும். இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப் படுவதால் தமிழக அரசுக்கு அதிக அளவு செலவினம் ஏற்படும். எனினும், விவசாயிகளுக்கு அதிக பயன் அளிக்கக்கூடிய திட்டமாக இது இருப்பதால், கூடுதல் செலவை எனது தலைமையிலான அரசு மனமுவந்து ஏற்றுக் கொள்ளும்.

இதுவரை பயிர்க் காப்பீட்டு கட்டண மானியமாக ஆண்டொன்றுக்கு சராசரியாக 40 கோடி ரூபாய் மட்டுமே மாநில அரசு செலுத்தி வந்தது. இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதன் காரணமாக கடந்த ஆண்டுபயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை அளவிலேயே தற்போதும் விவசாயிகள் காப்பீடு செய்தால் அரசு சுமார் 500 கோடி ரூபாய் காப்பீட்டு மானியமாக வழங்க வேண்டும். இன்னும் அதிக அளவில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்தால் அரசுவழங்க வேண்டிய காப்பீட்டு மானியம் இன்னும் அதிகரிக்கும். தென்னை விவசாயிகளைப் பொறுத்தவரை தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் தென்னை மரக் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்திடவும் நான் உத்தரவிட்டுள்ளேன். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.