வீ டுகளுக்கு இணையதளம் மூலம் மின் இணைப்பு பெறும் திட்டம் ; முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

வீ டுகளுக்கு இணையதளம் மூலம் மின் இணைப்பு பெறும் திட்டம் ; முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

திங்கள் , ஆகஸ்ட் 08,2016,

சென்னை : 242 கோடியே 25 லட்சத்து  96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 23 துணை மின் நிலையங்களை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம்  வாயிலாக பொதுமக்கள் புதிய  தாழ்வழுத்த மின் இணைப்பு பெறும் சேவையயும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சக்கட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் மக்களுக்கு சீரான  மின்சாரம் வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை முதலமைச்சர் ஜெயலலிதா  அவர்கள்  தலைமையிலான அரசு அமைத்து வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் – கருவலூர்,  சேலம் மாவட்டம் – சிங்கபுரம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள 230/110 கி.வோ. துணை மின் நிலையங்கள்; திருப்பூர் மாவட்டம் – காடையூர்,  ஈரோடு மாவட்டம் – பெருந்துறை சிப்காட் ஐஐஐ, திண்டுக்கல் மாவட்டம் – எல். வளையப்பட்டி, சிவகங்கை மாவட்டம் – அமராவதிபுதூர், தூத்துக்குடி மாவட்டம் – சன்னதுபுதுக்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மணிகண்டம், திருவள்ளுர் மாவட்டம் – தேர்வாய்கண்டிகை ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள 110/11  கி.வோ துணை மின் நிலையங்கள்; மதுரை மாவட்டம் – வாளாந்தூரில் நிறுவப்பட்டுள்ள 110/33-11  கி.வோ. துணை மின் நிலையம்; 

விருதுநகர் மாவட்டம் – வேலாயுதபுரம், தஞ்சாவூர் மாவட்டம் – கும்பகோணம் நகரியம், வேலூர் மாவட்டம்  – பரவக்கல், கிருஷ்ணகிரி மாவட்டம் – ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி சிப்காட் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்; சேலம் மாவட்டம் – வீரபாண்டி மற்றும் எட்டிகுட்டைமேடு ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையங்கள்;

கடலூர் மாவட்டம் – கோமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் – கந்தர்வக்கோட்டை மற்றும் கீழக்குறிச்சி, திருவாருர் மாவட்டம் – வடபாதிமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் – கேளம்பாக்கம், தருமபுரி மாவட்டம் – ராயக்கோட்டை ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்;  என மொத்தம் 242 கோடியே 25 லட்சத்து  96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 23 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in< http://www.tangedco.gov.in> என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் இதர தாழ்வழுத்த புதிய  மின் இணைப்பு பெறும் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2.7 கோடி தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் உள்ளனர்.  புதிய தாழ்வழுத்த மின் இணைப்பு கோரி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரர் அந்தந்த பகுதிக்குட்பட்ட மின்வாரிய அலுவலங்களுக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கும் முறை தற்போது  நடைமுறையில் உள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த  இணையதளம் வாயிலாக தாழ்வழுத்த புதிய  மின் இணைப்பு பெறும் சேவையின் மூலம், பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் இதர தாழ்வழுத்த புதிய  மின் இணைப்பு பெறுவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in< http://www.tangedco.gov.in> என்ற இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தொடர்புடைய இதர ஆவணங்களையும் பதிவு ஏற்றம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், விண்ணப்பத்திற்கான பதிவு கட்டணம் மற்றும் இதர கட்டணங்களையும் இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.  இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட புதிய தாழ்வழுத்த மின் இணைப்பு, விண்ணப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை விவரங்களையும் இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இம்மேம்படுத்தப்பட்ட சேவையின் மூலம் பொதுமக்கள் கால விரையத்தை தவிர்த்து பயனடையலாம்.