வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்:பணி நியமன வேலைவாய்ப்பு ஆணைகளை அமைச்சர் T.K.M.சின்னையா வழங்கினார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்:பணி நியமன வேலைவாய்ப்பு ஆணைகளை அமைச்சர் T.K.M.சின்னையா வழங்கினார்

திங்கள் , பெப்ரவரி 08,2016,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சென்னையில் அண்மையில் பெய்த கனமழையினால் கால்வாய் கரையோரங்களில் வாழ்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த டிசம்பர்(2015) மாதம் 29–ந்தேதி அன்று மறுகுடியமர்வு பணிகளையும் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரையில் 3,753 பாதிப்பிற்குள்ளான குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல்–அமைச்சர் உத்தரவின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு முகாம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலமாக நேற்று முன்தினம் (சனிக்கிழமை) துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் 200–க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இம்முகாமில் ஓக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் எழில்நகர் குடிசைப்பகுதி மாற்று வாரிய திட்டப்பகுதிகளை சேர்ந்த 6,022 மனுதாரர்கள் பதிவு செய்தனர்.

முகாமில், சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கும் துறை மூலம் மருத்துவ வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

வேலைவாய்ப்பு முகாமில், இரவுக்காவலர், டிரைவர், சமையலர், தையல், ‘எம்பிராயிடரிங்’, கட்டுமானத்தொழில் தொடர்புடைய பணிகள், செவிலியர் உதவியாளர் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 600–க்கும் மேற்பட்ட நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கும் பணி நியமன ஆணைகள் மற்றும் 1500–க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக பி.எஸ்.என்.எல்., சிம்பட், அப்பாரல் ‘டிரயினிங்’ மற்றும் குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் வழங்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர 1,400 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்து 100–க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.