வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , டிசம்பர் 07,2015,

சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், குடிசைகள் சேதமடைந்த குடும்பத்தினருக்கு தலா 4,100 ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த திரு. தங்கராஜின் மகன் ஆறுமுகம், வடபழனி சோமசுந்தர பாரதி நகரைச் சேர்ந்த திரு. மூர்த்தியின் மகன் கார்த்திக், மயிலாப்பூர் வட்டம் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த திரு. சுப்பையாவின் மகன் பாபு, நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்த திரு. ஜீவரத்தினத்தின் மகன் வேலு, திரு. ஆனந்தராஜின் மகன் ஜான்சன் ஆகியோருக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் திருமதி. பா. வளர்மதி, மழைவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவி, தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். நிதியுதவியைப் பெற்றுக் கொண்டவர்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

மேலும், மயிலாப்பூர் மற்றும் எழும்பூர் வட்டங்களில் கனமழையினால் பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு அரசின் நிவாரண உதவியாக தலா 4,100 ரூபாயையும், வேட்டி – சேலை மற்றும் 10 கிலோ அரிசியையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, டாக்டர் ஜெ. ஜெயவர்தன் எம்.பி., மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், வெள்ளம் காரணமாக உயிரிழந்த, குமாரரெட்டி பட்டியைச் சேர்ந்த தாமோதரன், மற்றும் முதலூரைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவியை அமைச்சர் திரு. S.P. சண்முகநாதன் வழங்கினார்.