வெள்ளம் காரணமாக,தொற்று நோய் பரவாமல் தடுக்க ஆட்டோ வாகனங்களில் ஒலிப் பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளம் காரணமாக,தொற்று நோய் பரவாமல் தடுக்க ஆட்டோ வாகனங்களில் ஒலிப் பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன் , டிசம்பர் 10,2015,

சென்னையில் மழை வெள்ளம் காரணமாக, நோய் ஏற்படாமல் இருப்பதற்காக பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து, முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, ஆட்டோ வாகனங்களில் ஒலிப் பெருக்கி பொருத்தப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார்.

பின்னர் பேசிய, அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் இருக்க மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பல்வேறு பன்முக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சுகாதாரத் துறையுடன் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து 100 ஆட்டோக்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் விதமாக ஒவ்வொரு வீடாக சென்று 1/2 கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் 20 குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டோவிலும் பிளிச்சிங் பவுடர், குளோரின் மாத்திரைகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் மைக் மூலம் சுகாதாரம் குறித்த விழிபுணர்வு விளம்பரங்கள் செய்ய பொது சுகாதார ஆய்வாளர் உடன் செல்வார். மேலும், அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பது குறித்து மைக் மூலம் பொது சுகாதார ஆய்வாளர் விளக்கி கூறுவார். மேலும், பொது மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களிலும் மைக் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வார். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2000 டன் பிளீச்சிங் பவுடரும், 1 கோடி குளோரின் மாத்திரைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் 19.12.2015 அன்று மட்டும் 1817 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 3.45 லட்சம் மக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள 26 ஆயிரம் துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணியும் துவக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு மாதத்திற்கு தேவையான அளவு ரூ.90 கோடி மதிப்புள்ள மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், 24 மணி நேரம் செயல்படும் 104 தொலைபேசி சேவையை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொண்டார்.

மேலும், இந்நிகழ்ச்சியின் போது சென்னையில் உள்ள அனைத்து உட்புற பகுதிகளும் ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் தெரியும் என்பதால் சேவை மனப்பான்மையுடன் சுகாதார ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே போல, இந்த பணியினை சிறப்பாக செய்து முடிக்கவும், அந்தந்த பகுதி மாநகராட்சி பிரிதிநிதிகளின் உதவியுடன் இந்த பணிகளை மேற்கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டார்.