வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளால் இயல்புநிலை திரும்பியது :முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுவருகிறது

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளால் இயல்புநிலை திரும்பியது :முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுவருகிறது

சனி,நவம்பர்,28-2015

தமிழகத்தில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளால், இயல்புநிலை திரும்பியுள்ளது. முதலமைச்சர் ஆணைக்கிணங்க, நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்புக்கு, நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது. அமைச்சர் திரு. முக்கூர் N. சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதுடன், நிதியுதவி மற்றும் நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினர்.

இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, நெல்லையில் நடைபெற்ற அகிலஇந்திய குலாலர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

கனமழையால், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகேயுள்ள பதினாலாம்பேரி கிராமத்தில் உள்ள குளம் நிரம்பியுள்ளது. குளத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் செல்லும் வாய்க்கால் உடையாமல் தடுக்க, முதலமைச்சர் உத்தரவின்பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் அப்பகுதி கிராமத்திற்குள் தண்ணீர் புகாமல் தடுக்கப்பட்டது.

திருச்சி தாராநல்லூர் பகுதியில் மழையால் சேதமடைந்த சிறிய பாலத்தினை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். மனோகரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள ராஜாதோப்பு அணை, கனமழையால் நிரம்பியுள்ளது. இதனை சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனிடையே, சென்னை ஷெனாய் நகர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த நிதியுதவியான தலா 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உயிரிழந்தோர் குடும்பத்தினரிடம், அமைச்சர் திருமதி. எஸ். கோகுல இந்திரா வழங்கி ஆறுதல் கூறினார்.