வெள்ள நிவாரணத்திற்கு மேலும் ரூ.18 கோடி வழங்கப்பட்டது:முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.338 கோடி அளிப்பு

வெள்ள நிவாரணத்திற்கு மேலும் ரூ.18 கோடி வழங்கப்பட்டது:முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.338 கோடி அளிப்பு

வெள்ளி, பெப்ரவரி 05,2016,

மழை-வெள்ள நிவாரணத்துக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.338 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (பிப்.4) மட்டும் பெரு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ரூ.18 கோடி நிதி அளித்தனர். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

“லார்சன் அண்ட் டியூப்ரோ’: மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதாவிடம், பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமையன்று, “லார்சன் அண்ட் டியூப்ரோ லிமிடெட்’ நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் ரூ. 10 கோடியே 80 லட்சம் ரூபாய் அளித்தார்.

ஐ.ஓ.பி. சார்பில்… இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆர். கோட்டீஸ்வரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான ரூ.4 கோடியே 18 லட்சத்து 82 ஆயிரத்து 12-ம், ஐடிபிஐ வங்கியின் முதன்மை பொதுமேலாளர் மற்றும் மண்டலத் தலைவர் (தெற்கு) ரபிநாராயன் பாண்டா ரூ. 1 கோடியே 25 லட்சத்தையும் அளித்தனர்.

திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் செயல் இயக்குநர் எஸ். கோபிநாத், பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான ரூ.1 கோடியே 63 லட்சத்து 27 ஆயிரத்து 230, பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் செயல் இயக்குநர் ஆர்.ஏ. சங்கர நாராயணன் ரூ.1 கோடியும் நிதி அளித்தனர்.

இதுவரை ரூ.338 கோடி: தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 18 கோடியே 87 லட்சத்து 9 ஆயிரத்து 242 ரூபாயை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வியாழக்கிழமை அளித்தனர்.

மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.338 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 503 ஆகும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.