திமுக வேட்பாளர்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்: கருணாநிதி வீடு முற்றுகை

திமுக வேட்பாளர்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்: கருணாநிதி வீடு முற்றுகை

சனி, ஏப்ரல் 16,2016,

பாளையங்கோட்டை, விருத்தாசலம் தொகுதி வேட்பாளர்களை மாற்றக் கோரி, திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தை அந்தக் கட்சியினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட சில வேட்பாளர்களை மாற்றக் கோரி, புதன்கிழமையே பிரச்னை வெடித்தது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு உள்ளிட்ட சில இடங்களில் வியாழக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.
 இதையடுத்து, கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்த கிள்ளை எஸ்.ரவீந்திரனை சீர்காழி தொகுதி வேட்பாளராக அறிவித்ததைக் கண்டித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். மேலும், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் மமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. இதேபோல், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
 இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான டி.பி.எம். மைதீன்கானை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 100-க்கும் அதிகமானோர் 4 வேன்களில் கோபாலபுரம் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர்.
 இவர்கள் மைதீன்கானை மாற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த நேரத்தில் கருணாநிதி இல்லத்தில்தான் இருந்தார். கூட்டத்தின் சத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கருணாநிதியின் இல்லக் காவலர்கள் திமுகவினரை கட்டுப்படுத்தினர். இருவரை மட்டும் அழைத்து பிரச்னையைக் கேட்டறிந்து, பரிசீலிப்பதாக கூறி முக்கிய நிர்வாகிகளை அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியது:-
 மைதீன்கான் தொகுதிக்கு எந்தப் பணியையும் இதுவரை செய்யவில்லை. கட்சியினரையும் மதிப்பது இல்லை. தொகுதியில் பல இடங்களில் மைதீன்கானுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவரை நிறுத்தினால் திமுக தோற்பது நிச்சயம். அதனால் அவரை மாற்ற வேண்டும் என்றனர்.
 இதேபோல், விருத்தாசலம் தொகுதி வேட்பாளர் தங்க.ஆனந்தனை மாற்றக் கோரியும் கருணாநிதியின் இல்லத்தை திமுகவினர் முற்றுகையிட்டனர்.