வேட்பாளர்கள் முன்னிலையில் தி.மு.க.வினரின் கோஷ்டி மோதலால் சேலத்தில் பரபரப்பு

வேட்பாளர்கள் முன்னிலையில் தி.மு.க.வினரின் கோஷ்டி மோதலால் சேலத்தில் பரபரப்பு

ஞாயிறு, ஏப்ரல் 17,2016,

சேலத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது, வேட்பாளர்கள் முன்னிலையில் தி.மு.க.வினர் கோஷ்டியாக மோதிக்கொண்டனர்.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.வில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு மற்றும் ஓமலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் அடங்குகிறது. இந்த 4 தொகுதிகளிலும் தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் வடக்கு தொகுதியில் மாவட்ட செயலாளர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன், சேலம் தெற்கு தொகுதியில் முன்னாள் மாநகர துணை செயலாளர் குணசேகரன், சேலம் மேற்கு தொகுதியில் முன்னாள் துணைமேயர் பன்னீர்செல்வம், ஓமலூர் தொகுதியில் அம்மாசி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

வேட்பாளர்களில் பன்னீர்செல்வம், அம்மாசி ஆகியோர் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள். சேலம் தெற்கு தொகுதி வேட்பாளர் குணசேகரன் தி.மு.க. தலைமையிடம் நேரடியாக தொடர்பு கொண்டு சீட் பெற்றவர். மாவட்ட செயலாளரான வக்கீல் ஆர்.ராஜேந்திரன் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் என்பதால் சீட் கிடைத்தது. சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் வக்கீல் ராஜேந்திரனை தவிர, இவரது ஆதரவாளர்கள் யாருக்கும் ‘சீட்‘ கிடைக்கவில்லை. இருப்பினும் மாவட்ட செயலாளருக்காக பொறுத்து கொண்டு அமைதியுடன் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள 4 வேட்பாளர்களும் ஒருங்கிணைந்து சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அதையொட்டி, அண்ணாசிலை முன்பு தி.மு.க.வினர் திரளாக குவிந்திருந்தனர்.

காலை 9.30 மணிக்கு வேட்பாளர்கள் வக்கீல் ஆர்.ராஜேந்திரன், குணசேகரன், பன்னீர்செல்வம், அம்மாசி ஆகிய 4 பேரும் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் ஜி.கே.சுபாசு, துணை செயலாளர் ரகுபதி, நகரசெயலாளர் ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சூடாமணி உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மாலை அணிவித்து விட்டு அனைவரும் ஏணிப்படியில் இருந்து கீழே இறங்கி வர முற்பட்டனர். அந்த வேளையில் மாவட்ட பொருளாளர் சுபாஷ், நகர செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் ‘தலைவர் கருணாநிதி வாழ்க, ஸ்டாலின் வாழ்க’ என்ற கோஷம் எழுப்பினர்.
அப்போது கூட்டத்தில் இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள், ‘‘வீரபாண்டி ஆறுமுகம் வாழ்க.! என கோஷமிட்டனர். இது எதிர்தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்களில் அழகாபுரம் பகுதி செயலாளர் குமரவேல், அக்கோஷத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவர் தாக்கப்பட்டார். அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளரான முன்னாள் பகுதி செயலாளர் ஜெயவேலும் தாக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. மேலும் ஒருவருக்கு ஒருவர் அவதூறாக பேசிக்கொண்டனர். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக சண்டையிட்டவர்களை இதர தி.மு.க.வினர் விலக்கி தள்ளிச்சென்றனர். மேலும் சேலம் டவுன் போலீசாரும் மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினார்கள்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.