10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில்3,636 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில்3,636 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னை தரமணியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 110 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திடும் வகையில், செயிண்ட் கோபைன் ஆராய்ச்சி மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மொத்தம் 3,636 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறந்து வைத்தார். மேலும், 14,878 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திடும் வகையில், 6,418 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள தொழிற்சாலைகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

உற்பத்தியைப் பெருக்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தச் செய்வதிலும், இந்தியாவில், தமிழகத்தை தொழில் துறையில் வலிமை மற்றும் எழுச்சி மிக்கதாக உருவாக்கவும், சிறந்த, விரும்பத் தக்க முதலீட்டுக்கு உகந்த தேர்விடமாக அமைக்கவும், முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு, ஆற்றல் மிகு ஆக்கபூர்வமான கொள்கைகளை வெளியிடுதல், திட்டமிடுதல் மற்றும் அவைகளை சீரிய முறையில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக, தொலைநோக்கு திட்டம் 2023, தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012, தமிழ்நாடு தொழில் கொள்கை 2014, மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் கொள்கை 2014 மற்றும் உயிரி தொழில் நுட்பக் கொள்கை 2014 ஆகியவைகள் வெளியிடப்பட்டன. தொழில் வளர்ச்சியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையிலும், அதிக தொழில் முதலீட்டினை ஈர்க்கும் வண்ணமும், மாநிலத்தின் தொலை நோக்குத் திட்டங்களான தொழில் மயமாக்குதல், வேலைவாய்ப்பை அதிகரித்தல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மாநிலம் முழுவதுமான சீரான வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழலுடன் இணைந்த நிலைத்த நீண்ட கால முன்னேற்றம் ஆகியவைகளை அடைவதற்கான ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியாக மாநிலத்தில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் சென்னையில் நடத்தப்பட்டது.

இந்த உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் – பெரம்பலூரில் சுமார் 1175 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.எப். லிமிடெட் நிறுவனத்தின் டயர் உற்பத்தி தொழிற்சாலை;

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துறையூர் மற்றும் கரூர் மாவட்டம் – கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் சுமார் 1000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 975 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெல்ஸ்பன் ரினீவபுல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள 150 மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் திட்டம்;

காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற் பூங்காவில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் தயாரிக்கும் சாம்சங் இந்தியா எலக்டிரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட தொழிற்சாலை;

விருதுநகர் மாவட்டம் – திருச்சுழியில் சுமார் 2,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சன் எடிசன் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள 50 மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் நிறுவனம்;

திருவண்ணாமலை மாவட்டம் – செய்யாறு சிப்காட் தொழிற் பூங்காவில் சுமார் 5,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பிரபலமான சர்வதேச காலணிகள் தயாரிக்கும் குரோத் லிங்க் ஓவர்ஸிஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையின் விரிவாக்கம்;

காஞ்சிபுரம் மாவட்டம் – குன்னம்பட்டு கிராமத்தில், சுமார் 100 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள சுவையூட்டிகள் மற்றும் நறுமணப் பொருட்கள் தயாரிக்கும் Takasago இன்டர்நேஷ்னல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை;

ஈரோடு மாவட்டம் – பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் 390 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள செயிண்ட் கோபைன் இந்தியா நிறுவனத்தின் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை- என மொத்தம் 9,775 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் 3636 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஏழு நிறுவனங்களின் தொழிற்சாலைகளை முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் – ஒரகடம் சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில், சுமார் 450 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள டிரக் மற்றும் பேருந்து ரேடியல் டயர் தயாரிக்கும் அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை விரிவாக்கம்;

பெரம்பலூர் மாவட்டம் – பெரம்பலூரில், 380 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 931 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள எம்.ஆர்.எப். லிமிடெட் நிறுவனத்தின் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் வேலூர் மாவட்டம் – அரக்கோணத்தில் 300 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள எம்.ஆர்.எப். லிமிடெட் நிறுவனத்தின் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம்;

காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற் பூங்காவில் 500 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள செயிண்ட் கோபைன் இந்தியா நிறுவனத்தின் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம்;

புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலையில், சுமார் 1998 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 677 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் நிறுவப்படவுள்ள ஒருங்கிணைந்த நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி மற்றும் தளவாட வசதிகள்- கிருஷ்ணகிரி மாவட்டம் – பர்கூர் சிப்காட் தொழிற் பூங்காவில் சுமார் 10,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், அவற்றில் 7,000 பேர்கள் அருகிலுள்ள கிராமப் புறங்களிலிருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் பயன்பெறும் வகையில், 360 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள பிரபலமான சர்வதேச காலணிகள் தயாரிக்கும் லோட்டஸ் புட்வேர் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை;

கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூரில், சுமார் 1000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை தயாரிக்கும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை விரிவாக்கம்;

காஞ்சிபுரம் மாவட்டம் – பனையூர் கிராமம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் – தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற் பூங்கா ஆகிய இடங்களில் சுமார் 250 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள இறால் தீவனம், மீன் தீவனம் மற்றும் இறால் குஞ்சு உற்பத்தி செய்திடும் Sheng Long பயோ-டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை- என மொத்தம், 14,878 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 6418 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள ஏழு நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு நத்தம் ஆர். விசுவநாதன், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.P. தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் திரு.கே.ஏ.ஜெயபால், தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ச.வி. சங்கர், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.