10-மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் வழங்கப்பட்டு வரும் வினா வங்கிகள்:மாணாக்கர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் வரவேற்பு

10-மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் வழங்கப்பட்டு வரும் வினா வங்கிகள்:மாணாக்கர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் வரவேற்பு

ஞாயிறு, ஜனவரி 10,2016,

10- மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வினா-வங்கி மற்றும் தீர்வு புத்தகங்களுக்கு மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது, ஆசிரியர்கள் மத்தியிலும் மிகச்சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா, பள்ளிக்கல்வித்துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து, மாணவ-மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக, தமிழகத்தில் ஆண்டுதோறும் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்து வருவதுடன், முதலிடம் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு, மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், அவர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தயாரிக்கப்பட்ட வினா-வங்கி மற்றும் தீர்வு புத்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா, அண்மையில் வெளியிட்டார்.

முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள், அவற்றுக்கான விடைகள் மற்றும் தீர்வு புத்தகங்கள், முதலமைச்சர் உத்தரவின்பேரில், பள்ளிக்கல்வித்துறையால் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் அவற்றை வாங்கிச் சென்று, தேர்வுகளுக்காக தயாராகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில், முதல்கட்டமாக வந்த வினா-வங்கி புத்தகங்கள் முழுவதுமாக விற்பனை செய்யப்பட்டு, கூடுதல் புத்தகங்கள் கோரப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு மட்டுமல்ல, இந்த வினா-வங்கி புத்தகங்களில் இருந்து, குறிப்பெடுத்து, பாடம் நடத்த முடிவதால், தங்களுக்கும் பயனுள்ளதாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.

வினா-வங்கி மற்றும் தீர்வுப் புத்தகங்கள், தங்களுக்கு மேலும் ஊக்கத்தை அளித்திருப்பதாகவும், முதலமைச்சரின் இத்தகைய தொடர் நடவடிக்கைகளால், இந்த ஆண்டு, சிறப்பாகப் படித்து, அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைவோம் என்றும் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

மாணவ-மாணவிகளின் முன்னேற்றமே, ஒரு நாட்டின் முன்னேற்றம்- குறிப்பாக, தமிழகத்தின் முன்னேற்றம் என்பதைக் கருத்தில்கொண்டு, முதலமைச்சர் ஜெயலலிதா, கல்வித்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதற்காக, மாணவ சமுதாயம், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.