10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிசுகள் வழங்கி பாராட்டு

10 ம் வகுப்பு மற்றும் 12 ம்  வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிசுகள் வழங்கி பாராட்டு

வியாழன், ஜனவரி 19,2017,

தமிழை முதன்மை பாடமாக கொண்டு பயின்று 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிப்பில் கடந்த ஆண்டில் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வி, சமூக நலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம் ஆகிய 6 துறைகளால் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் 32 மாணவ, மாணவியர் முதலிடம், 92 பேர் 2-ம் இடம், 456 பேர் 3-ம் இடத்தை பெற்றுள்ளனர்.

இதில், 10-ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்ற 13 மாணவ, மாணவியருக்கு ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலைகளை நேற்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். அதேபோல், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 19 மாணவ, மாணவியர்களுக்கு 9 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகள், பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

பின்னர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, ‘‘கடந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2-வில் மாநில அளவில் முதலிடத்துக்கான பரிசுகளைப் பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் பாராட்டு, வாழ்த்துகளை தெரிவித் துக்கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக படித்து தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். உங்கள் கல்வியில் மேன்மேலும் வளர்ச்சியுற்று நீங்கள் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்” என்றார்.

இந்த  நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.சரோஜா, பாண்டியராஜன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக் கல்வி செயலர் த.சபிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.