104 தமிழக மீனவர்களையும், 66 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

104 தமிழக மீனவர்களையும், 66 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

புதன், ஜனவரி 06,2016,

இலங்கையில் தற்போது, தமிழகத்தைச் சேர்ந்த 104 மீனவர்கள் காவலில் உள்ளதாகவும், இவர்களையும் அங்குள்ள தமிழக மீனவர்களின் 66 படகுகளையும் உடனடியாக விடுவிக்க உயர்மட்ட அளவில் தலையிட்டு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் திரு. நரேந்திரமோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் கடந்த 24 மணி நேரத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடிப்பகுதிகளில் தொழில் செய்யும் போது, அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வதும், கைது செய்வதும் தொடர்ந்து தங்குதடையின்றி நீடித்து வருவது துரதிர்ஷ்வசமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், 4 விசைப்படகுகளில் சென்ற 20 மீனவர்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதாகவும், முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் 8 மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப் பேட்டையிலிருந்து படகு ஒன்றில் சென்ற போது, இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டு முல்லைத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இன்றை தினம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் 2 படகுகளில் சென்ற போது, அவர்கள் கைது செய்யப்பட்டு, தலைமன்னாருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தைச் சேர்ந்த 104 மீனவர்கள் இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் தொடர்ந்து பல வாரங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளதால், பண்டிகை காலத்தை தங்கள் குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் போனது மிகவும் வருந்தத் தக்கதாகும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, இலங்கையில், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 66 மீன்பிடி படகுகளும், உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படகுகளின் உரிமையாளர்களான மீனவர்கள் பல மாதங்களுக்கு முன்பே விடுவிக்கப்பட்டும் கூட அவர்களது படகுகள் இன்னும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. இலங்கை கடலோரப் பகுதியில், இந்தப் படகுகள் மழை, காற்று என இயற்கைப் பாதிப்புகளுக்கு உள்ளாகி கிடக்கின்றன. இந்தப் படகுகளும் மீன்பிடி உபகரணங்களும், தற்போது, முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில், சேதமடைந்துள்ளன. இது, இம்மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு கிடைத்துள்ள பலத்த அடியாகும் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மீனவர்கள், அவர்களின் படகுகளுடன், நீண்டகாலமாக இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விரைவில் விடுவிக்க இந்திய அரசு தீவிரமான முயற்சியை எடுத்ததாக தெரியவில்லை. இதனால், தமிழகக் கடலோர மீனவர்கள் பெரிதும் துயரமும், வேதனையும் அடைந்துள்ளனர் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாக் நீரிணையில், தமிழக மீனவர்களுக்கு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமை வரலாற்று ரீதியாக உள்ளது என்ற நிலைப்பாட்டில், எனது தலைமையிலான தமிழக அரசு உறுதியாக உள்ளது – இந்த உரிமையை மீட்டெடுத்து நிலைநாட்ட வேண்டும் என்பதிலும் எனது தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. இலங்கை கடற்படையினர், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை தொடர்ந்து மீறி வருவதற்கும், அவர்களை கைது செய்தும், காவலில் வைத்தும், வன்செயல்களில் ஈடுபட்டு வருவதற்கும், இந்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் – இதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – மீனவர் பிரச்னையில் மத்திய அரசு, திட்டவட்டமான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தமிழக மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கடல் எல்லைக்கோடு பிரச்னையும், உச்சநீதிமன்ற விசாரணையில், நிலுவையில் உள்ளது என்பதை பிரதமர் நன்கு அறிவார் – கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அரசியல் ரீதியிலான செல்லத்தக்க தன்மையை எதிர்த்து, தாம் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தன்னை இணைத்துக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் தங்களது ஆழ்கடல் மீன்பிடித் திறமைகளை மேம்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை வாங்குவதற்கு படகு ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கும் முன்னோடித் திட்டத்தை தமது தலைமையிலான அரசு, நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது – ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் ஒருங்கிணைந்த திட்டத்திற்காக, மத்திய அரசிடமிருந்து ஏற்கெனவே ஆயிரத்து 520 கோடி ரூபாய் நிதியுதவியும், இத்திட்டத்தின் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் மானியத்தையும் தாம் கோரியிருப்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசின் இந்தக் கோரிக்கை மீது கூட, மத்திய அரசு கடந்த 18 மாதகாலமாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை – இத்திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என தாம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், பயன்படுத்தப்படாமல் இலங்கையின் கட்டுப்பாட்டில் நீண்டகாலமாக வைக்கப்பட்டிருப்பதாலும், பருவமழை காரணமாகவும் பலத்த சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது – இந்தப் படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இதன்மூலம் மீனவர்களின் ஒரேவாழ்வாதாரமான இந்த சாதனங்களை மத்திய அரசு விரைவில் புதுப்பித்துத் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய உணர்வுப்பூர்வமான இந்தப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் – இந்த விவகாரத்தில், பிரதமர் நேரடியாகத் தலையிட்டு, இலங்கை அரசுடன் உயர்மட்ட அளவில் தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும், இலங்கை சிறைகளில் உள்ள 104 மீனவர்களையும், அங்குள்ள 66 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உறுதியான நடவடிக்கைகளை பிரதமர் எடுக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஜெயலலிதா தமது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.