11 வகை மூலிகை மருந்துகளை கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ திட்டம்:முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்

11 வகை மூலிகை மருந்துகளை கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ திட்டம்:முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்

செவ்வாய், ஜனவரி 12,2016,

தாய்மை அடைந்த பெண்களின் நலன் கருதி, 11 வகை மூலிகை மருந்துகளைக்கொண்ட கர்ப்பிணிகளுக்கான ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி‘ திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில், 15 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வெள்ளி விழா விருந்தினர் இல்லம், கலையரங்கம் மற்றும் நிர்வாக பிரிவு கட்டிடத்தில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம்னையில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிற்றுண்டிச் சாலை மற்றும் மாணவ–மாணவியர்களுக்கான தனி அறைகள், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விபத்து கவனிப்புப் பிரிவு, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிக் கட்டடம், தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்து 6 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் நேரடியாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்ட சிறப்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கம், விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் அருப்புக்கோட்டை, இராஜபாளையம், காரியாப்பட்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகள், சேலம் மாவட்டம் மேட்டூர், திண்டுக்கல் மாவட்டம் பழனி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் 8 கோடியே 55 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, அறுவை அரங்கம், 24 படுக்கைகள் கொண்ட நோயாளிகள் பிரிவு, நவீன சமையல் கூடம், புறநோயாளிகள் பிரிவு, தீவிர கவனிப்பு பிரிவு, விபத்து கவனிப்பு பிரிவு, யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மருத்துவப் பிரிவுக் கட்டடங்கள், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் 35 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள துணிகளை உலரவைக்கும் நவீன உலரகம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை செவிலியர் பயிற்சி பள்ளிக் கட்டடம், திருவள்ளூர், திருநெல்வேலி, சேலம், கடலூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, விருதுநகர், திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 12 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 12 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், திருநெல்வேலி, காஞ்சிபுரம், கடலூர், திண்டுக்கல், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், திருநெல்வேலி மாவட்டம் நன்னகரம், கோலியான் குளம் மற்றும் சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம், கே.மோரூர் ஆகிய இடங்களில் 63 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் 34 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பயிற்சி வகுப்பறைகள், கோயம்புத்தூர், தருமபுரி, சேலம், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 8 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு கட்டடங்கள் மற்றும் 9 ஆரம்ப சுகாதார நிலைய வளாகங்களில் 1 கோடியே 37 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செவிலியர்களுக்கான குடியிருப்புகள், விழுப்புரம் மாவட்டம் சேரப்பட்டு மற்றும் கரியலூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ அலுவலர்களுக்கான 2 குடியிருப்புகள் மற்றும் 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை பணியாளர்களுக்கான 3 குடியிருப்புகள் என மொத்தம் 57 கோடியே 32 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 5 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ஆப்ரேட்டிங் மைக்ராஸ் கோப் கருவி மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி ஆகிய மருத்துவக் கருவிகளின் சேவையை தொடங்கி வைத்தார்.

மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகப்பேற்றின் முதல் மூன்று மாதங்களில் வரும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தவிர்க்க மாதுளை, மணப்பாகு மற்றும் கருவேப்பிலை பொடியையும், அடுத்த மூன்று மாதங்களின் போது தாய்க்கு ஏற்படும் இரும்புசத்து மற்றும் வைட்டமின் சத்து குறைபாட்டை நீக்க அன்ன பேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஏலாதி சூரண மாத்திரை போன்றவற்றையும், கடைசி மூன்று மாதங்களின் போது ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றை குறைக்க உளுந்து தைலத்தையும், சுகமகப்பேறுக்கு குந்திரிக தைலம் மற்றும் பாவன பஞ்சங்குல தைலத்தையும் பயன்படுத்தலாம். ஒரு பூரண மகப்பேறு மருத்துவம் என்பது குழந்தை பிறப்புடன் முடிந்து விடுவது இல்லை. குழந்தை பிறப்பிற்குப் பிறகு தாய்சேய் நலம் காக்கப்பட வேண்டும் என்பதால் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சதாவேரி லேகியம், இடுப்புவலி, கை, கால் வலிக்கு பிண்ட தைலம், குழந்தையின் ஆரம்பகால நோய்களை சமாளிக்க, உரை மாத்திரை ஆகியவை உள்ளிட்ட 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட ”அம்மா மகப்பேறு சஞ்சீவி” என்ற ஒரு முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம், தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 25.8.2015 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, தாய்மை அடைந்த பெண்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 கர்ப்பிணி பெண்களுக்கு நேற்று வழங்கி துவக்கி வைத்தார். சென்னை–அரசு சித்த மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில், கோட்டார்– அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி, சென்னை–அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, சென்னை– அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி ஆகிய நான்கு கல்லூரிகளுக்கு 98 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ள 4 புதிய பேருந்துகள், தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்து துறையினால், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையைச் சார்ந்த 2600–க்கும் மேற்பட்ட வாகனங்கள் தடையின்றி இயங்குவதற்கு தேவையான பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாகனங்களில் ஏற்படும் பழுதுகள் மற்றும் பருவப்பணிகள் காலதாமதமின்றி மேற்கொள்வதற்கும், உதிரி பாகங்களின் தேவையினை உடனடியாக பூர்த்தி செய்ய ஏதுவாகவும், மருத்துவ அலுவலர் மற்றும் ஓட்டுநர்களிடமிருந்து குறித்த நேரத்தில் தகவல்களை பெற்று துறையின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் வாகன பராமரிப்பு மற்றும் தகவல் திட்டத்தை செயல்படுத்த சுகாதார போக்குவரத்து துறையின் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு 7 லட்சம் ரூபாய் செலவில் 100 சியுஜி இணைப்புடன் கூடிய கைபேசிகள், ஆகியவற்றின் சேவைகளை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரக முதன்மைச் செயலாளர் மோகன் பியாரே, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.