ஐந்தாண்டுகளில் 11 லட்சத்து 49 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன, 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன – திமுக-வின் பொய்ப்பிரச்சாரத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில்

ஐந்தாண்டுகளில் 11 லட்சத்து 49 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன, 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன – திமுக-வின் பொய்ப்பிரச்சாரத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில்

செவ்வாய், ஏப்ரல் 19,2016,

காஞ்சிப்புரத்தில் திங்கள் மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர்  ஜெயலலிதா பேசினார். அப்போது திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும், மக்களாட்சியை மலரச் செய்ய வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டேன். நீங்களும் என்னுடைய வேண்டுகோளினை ஏற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தினீர்கள். உங்களின் அமோக ஆதரவுடன் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தேர்தலின் போது உங்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை அளித்தேனோ, என்னென்ன திட்டங்களை தருவேன் என்று சொன்னேனோ, அதையெல்லாம் நிறைவேற்றித் தந்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் திரு. கருணாநிதியும், திமுக-வினரும் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நம்முடைய சாதனைகளையெல்லாம் கண்டு மக்கள் பாராட்டுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் திரு. கருணாநிதியும், திமுக-வினரும் வேண்டுமென்றே 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தமிழ் நாட்டில் மின்வெட்டு உள்ளது என்று திமுக-வினர் செய்யும் பிரச்சாரம் பொய் பிரச்சாரம் என்பது எல்லோருக்கும் தெரியும். எந்த பொய்யையும் துணிந்து சொல்லலாம் என்று திமுக-வினர் நினைக்கிறார்கள். வாய்க்கு வந்ததைச் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என திமுக-வினர் நினைக்கின்றனர். மின் வெட்டே இல்லாத போது மின் வெட்டு இருக்கிறது என்று பிரச்சாரம் செய்வது எப்படிப்பட்ட கேலிக் கூத்து? வீடுகளுக்கு மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளிலும் கூட எந்தவித மின் வெட்டும் இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் 4 வருடத்திற்குள் மும்முனை இணைப்பு வழங்கி மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழி காணப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று என்று திமுக-வினர் கேட்கிறார்கள்; திரு. கருணாநிதியும் கேட்கிறார். அதற்கு என்னுடைய பதில், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.

திரு. கருணாநிதியின் குடும்பத் தொலைக் காட்சியிலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வீடு இல்லாதவர்களுக்கு 3 சென்ட் இடம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும்; ஏழை, எளியோருக்கு 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்று சிறு விளம்பரக் காட்சி மூலம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மை என்னவென்றால், கடந்த 5 ஆண்டுகளில் 11 லட்சத்து 49 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

திரு. கருணாநிதி குழப்பத்தில் இருக்கிறார் என்று தான் தெரிகிறது. 2006-ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தார்களோ, அதே வாக்குறுதிகளை மீண்டும் இப்போது 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் மீண்டும் சொல்லி இருக்கிறார்கள். 152 அடி வரை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்ற ஆணையே கூறும் போது, 142 அடி வரை தேக்கலாம் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அர்த்தமில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வாக்காளப் பெருமக்களே! முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடந்த சம்பவங்களை சற்று சிந்தித்து பார்த்தால், யார் தமிழக மக்களுக்காக உழைக்கிறார்கள், யார் “தன்” மக்களுக்காக உழைக்கிறார்கள் என்பது நன்றாகப் புரியும்.

தி.மு.க. குடும்பச் சண்டை காரணமாக மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு அப்பாவி ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்தார்களே? வீடியோ ஆதாரங்கள் இருந்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா? குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டது தான் மிச்சம். யார் பயன் பெறுவதற்காக இந்த நடவடிக்கை? “தன்” மக்களுக்காகத் தானே இந்த நடவடிக்கை?

தா. கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், அந்த கொலை வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இதற்கு காரணம் என்ன? “தன்” மக்கள் நலம் தானே?.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் துவங்கப்பட்டது எதற்காக? திமுக தலைவரின் குடும்பச் சண்டை காரணமாகத் தானே?

கேபிள் டிவி நிறுவனம் பின்னர் முடக்கப்பட்டதற்கு என்ன காரணம்? குடும்ப சண்டை தீர்ந்தது தானே காரணம்? இதற்கும் “தன்” மக்கள் நலம் தானே காரணம்.

இந்த சுய நலம் காரணமாகத் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து கேபிள் டி.வி. நிறுவனத்தை முடக்க வேண்டும் என தி.மு.க. நினைக்கிறது. எனவே தான் கேபிள் டி.வி. இணைப்பு பற்றி எந்த அறிவிப்பும் திமுக-வின் தேர்தல் அறிக்கையில் இல்லை.

இப்படி, “தன்” மக்கள் நலனுக்காக திரு. கருணாநிதி செய்த பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழக மக்களுக்காக திரு. கருணாநிதி செய்த பணிகள் இல்லவே இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். இருக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் இனப் படுகொலைக்கு காரணம் தி.மு.க.

கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டு மீனவர் சிறை பிடிப்புக்கு காரணம் தி.மு.க.

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடத் தவறியது தி.மு.க.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை புகுத்த உதவியது தி.மு.க.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தடுமாற்றத்துடன் நடந்து கொண்டது திமுக.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தாமதப்படுத்தியது தி.மு.க.

நில அபகரிப்புக்கு துணை போனது தி.மு.க.

திரைப்படத் துறையையே கபளீகரம் செய்தது தி.மு.க.

தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்தது தி.மு.க., என அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாங்கள் செய்த சாதனைகளையும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் நீங்கள் அனுபவித்த வேதனைகளையும் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது, உங்கள் அன்புச் சகோதரி ஆட்சியில் சாதனை மேல் சாதனை நடக்கிறது. அன்றைக்கு, திரு. கருணாநிதி ஆட்சியில் வேதனை மேல் வேதனை தான் உங்களுக்கு கிடைத்தது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.