11–வது நாள் திதியையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

11–வது நாள் திதியையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சனி, டிசம்பர் 17,2016,

சென்னை ; 11–வது நாள் திதியையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழகத்தின் முதலமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்து வந்த ஜெயலலிதா கடந்த 5–ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் 6–ந்தேதி மாலை அடக்கம் செய்யப்பட்டது.மரணம் அடைந்து 11–வது நாள் திதி நிகழ்ச்சி போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று நடந்தது.அதேநேரத்தில் மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திலும் தொண்டர்கள் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திதியையொட்டி வழக்கத்தைவிட நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நினைவிடத்துக்கு வந்த பல பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு வாய்விட்டு கதறி அழுததனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தினமும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. நேற்றும் அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.