110-ன் கீழ் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றுவோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

110-ன் கீழ் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றுவோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜூன் 16, 2017,வெள்ளி கிழமை, 

சென்னை : விதி எண் 110-ன் கீழ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு தொடர்ந்து நிறைவேற்றும் என்று நேற்று சட்டசபையில் ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.

இது குறித்து தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:-

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து ஆற்றிய உரை மறைந்த முதல்வர்  ஜெயலலிதா சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ், பல்வேறு அறிவிப்புகளைக் கொடுத்தார்கள். இன்றைக்கு தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் வந்துள்ளன என்றால், அதற்குக் காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விதி 110-கீழ் அறிவித்த திட்டங்களால்தான் ஏராளமான திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டிருக்கின்றன.

2011-12-ம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், சட்டமன்ற விதி 110-ன் கீழ் 51 அறிவிப்புகளைஅறிவித்தார்கள். அதில், 42 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. தற்போது 9 அறிவிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2012-13-ம் ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற விதி 110-ன் கீழ் 87 அறிவிப்புகளை அறிவித்தார். 87 அறிவிப்புகளுக்கும் அரசாணைகள் வெளியிடப்பட்டன. 65 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 22 திட்டப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2013-14-ம் ஆண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற விதி 110-ன் கீழ் 292 அறிவிப்புகளை அறிவித்தார். 290 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளன. 2 அறிவிப்புகளுக்கான அரசாணை, நீதிமன்றத்தில் வழக்கு போன்ற பல்வேறு காரணங்களினால் வெளியிடப்படவில்லை. நிறைவேற்றப்பட்டவை 219, பணி நடைபெற்றுக்கொண்டிருப்பவை 71.

2014-15-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற விதி 110-ன் கீழ் 236 அறிவிப்புகளை அறிவித்தார். 234 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களினால் 2 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்படாமல் நிலுவையிலுள்ளது. 136 அறிவிப்புகளுக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 98 அறிவிப்புகளுக்கானபணிகள் நடைபெற்று வருகின்றன. 2015-16-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற விதி 110-ன் கீழ் 213 அறிவிப்புகளை அறிவித்தார். 210 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களினால், 3 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்படவில்லை. அவையும் வெளியிடப்படஇருக்கின்றன. 95 அறிவிப்புகளுக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.115 அறிவிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆக மொத்தம், 2011-லிருந்து 2016 வரை சட்டமன்ற விதி 110-ன் கீழ், 879 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 557 அறிவிப்புகளுக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 315 அறிவிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 7 அறிவிப்புகளுக்கான திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட காரணத்தினாலும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாலும் முன்னேற்றம் இல்லாத நிலையில் இருக்கின்றன.

2016-17-ம் ஆண்டு, சட்டமன்ற விதி 110-ன் கீழ் 175 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 167 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 8 அறிவிப்புகளுக்கு திட்டப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தபணிகள் நடைபெற்று வருகின்றன. 20 அறிவிப்புகளுக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 147 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. ஆக மொத்தம்,மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் 1054 அறிவிப்புகளை அறிவித்தார்கள்.

1039 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 15 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டிய நிலையிலுள்ளது. 577 திட்டங்களுக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 462 பணிகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில், அறிவிக்கப்பட்டதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள், அதற்கான விளக்கத்தைத் தருகின்றோம். பணி நடைபெறவில்லையென்றால், அதற்குத் தகுந்த விளக்கத்தைத் தர தயாராயிருக்கிறோம். ஆகவே, விதி எண்.110-ன் கீழ் ஜெயலலிதா அறிவித்த அத்தனைதிட்டங்களுக்கும் முழுமையான பதிலை தந்திருக்கின்றேன். அரசு செயல்படுத்திய அத்தனை திட்டங்களுக்கும் விளக்கம் எங்களிடம் இருக்கிறது. ஆகவே, ஜெயலலிதா அறிவித்த அத்தனை திட்டங்களையும், அரசு விரைந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா, அவையிலே எந்தெந்த திட்டம் கொண்டுவரப்படும் என்பதை தெளிவாக அறிவித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. எந்தெந்த திட்டம் நிறைவேறவில்லை என்பதை நீங்கள் சுட்டிக்காட்டினால், அது அரசால் நிறைவேற்றப்படும். இங்கே இருக்கின்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவர்களுடைய தொகுதியில் 110 விதியின் கீழ் எந்தப் பணி, எந்தப் பகுதியில் நடைபெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினால் அம்மா அவர்களுடைய அரசால் அது நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். சாதித்துவிட முடியாது. ஆகவே, இது சாதனை அரசு. ஜெயலலிதா அரசு சாதனை அரசு. அதைத்தான் நாங்கள் புள்ளிவிவரத்தோடு சொல்கின்றோம். ஆகவே, நான் இங்கே தெளிவாகச் சொல்வது எல்லாம், ஜெயலலிதா விதி 110-ன் கீழ் அறிவிப்புக் கொடுத்ததை எந்தத் திட்டம் நிறைறவறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினால் அம்மா அவர்களுடைய அரசால் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.