110-வது விதியின் அறிவித்து நிறைவேற்றிய திட்டங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் விளக்கம்

110-வது விதியின் அறிவித்து நிறைவேற்றிய திட்டங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் விளக்கம்

திங்கள் , மே 09,2016,

தமிழகத்தில் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா விளக்கம் அளித்து வருகிறார். அந்த வகையில் இனறு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி கருணாநிதியும், தி.மு.க.வினரும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 17 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து நான் ஏற்கெனவே எனது அறிக்கைகளில் தெரிவித்திருந்தேன். தற்போது, மேலும் மூன்று  துறைகளில் நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விவரங்களை நான் அளிக்க விரும்புகிறேன்.

1.கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை

* கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் மாநில அரசின் பங்கான 4 விழுக்காட்டினை, 8 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
* மல்பரி நடவு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
* நவீன புழுவளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
* திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, கடலூர், வேலூர், திருச்செங்கோடு, சேலம் மற்றும் மதுரை பகுதிகளில் உள்ள நெசவாளர்களுக்கு ஙூ  குதிரை திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட 6,000 பெடல் தறிகள் அரசின் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளன.
* ஐந்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் சங்கங்களின் வகைபாடுகளுக்கேற்ப பதவி நிலை நான்கில் உள்ள காலமுறை ஊதியம் 1.1.2013 முதல் வழங்கப்படுவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

* சங்கங்களில் உள்ள 25,000 கைத்தறி நெசவாளர்களுக்கு மின் மோட்டார் பொருத்திய தார் சுற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.  
* முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 60000 வீடுகளும், கூடுதலாக நெசவாளர்களுக்கென 10,000 வீடுகளும் கட்டும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன.
* பஞ்சாயத்திற்கு ஒரு பட்டு விவசாயி- திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
* அரசு பட்டுப் பண்ணைகளில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* அரசு பட்டு நூற்பு அலகுகளில் மேம்படுத்தப்பட்ட புதிய பலமுனை பட்டு நூற்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
* சேலத்தில் பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
* ஒசூர், தமிழ்நாடு பட்டு வளர்ச்சி பயிற்சி நிலையத்திற்கு நவீன பயிற்சிக் கூடங்களும் தங்கும் விடுதியும் கட்டப்பட்டுள்ளன.
* ஸ்ரீரங்கத்தில் 100 மகளிருக்கு தஞ்சாவூர் ஓவியக் கலையில் ஒரு வருட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
* 65 வயதுக்கு மேற்பட்ட தலை சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது அறிமுகப்படுத்தப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது.

* நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ள சிறிய மற்றும் நடுத்தர சாயத் தொழிற்சாலைகளை மறுசீரமைப்பு செய்து பொது சுத்திகரிப்பு நிலையங்களுடன் அமைக்கப்படும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* ஜவுளித் தொழிலின் அனைத்து பிரிவுகளின் கருத்துகளைப் பெற்று ஒருங்கிணைந்த வளர்ச்சியினை அடைய, ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பிரதிநிதிகளை உள்ளடக்கி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் ’மாநில ஜவுளி ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.
* பட்டு ரக துணிகளின் விற்பனைக்கு உச்சவரம்பின்றி 10 விழுக்காடு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
* ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு
2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* மத்திய அரசின் ஒருங்கிணைந்த பதனிடும்  மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட திட்ட மதிப்பீட்டில் மாநில அரசின் பங்காக 25 விழுக்காடு அளவிற்கு நிதி உதவி வழங்கப்படுவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
* பட்டு வளர்ச்சிக்கான திட்டங்களில் மத்திய அரசால் நிறுத்தப்பட்ட சிலவற்றை, பட்டு விவசாயிகளின் நலன் கருதி, மாநில அரசின் நிதி உதவியாக 22 கோடி ரூபாய் வழங்கி  தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

2.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

* மாநில அரசால் செயல்படுத்தப்படும் மாநில  போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டம், விடுதிகளில் மாணாக்கர் சேர்க்கை, உயர்கல்வி சிறப்பு உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
*முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் ஆதி திராவிட நல விடுதிகள் மற்றும் பழங்குடியின நல விடுதிகளுக்கு, முதற்கட்டமாக 23 விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.  மேலும், 31 விடுதிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப் பெறும் தொகுதி-1, அதாவது, குரூப்-1 முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆதி திராவிட மாணாக்கர்களுக்கு,  அவர்கள் முதன்மைத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், சிறந்த கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற ஏதுவாக தலா 50,000 ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டு, இதுவரை 32 நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த பட்டயக் கணக்கர்கள், செலவுக் கணக்கர்கள், தேர்ச்சி பெற்ற பின், அவர்கள் சுயமாகத் தொழில் தொடங்கிட தலா 50,000 ரூபாய் மானியமாக வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
* 2013-14 ஆம் ஆண்டு முதல் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் கீழ் இயங்கும் 98 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கான கல்வி ஊக்குவிப்பு சிறப்புத் திட்டம், ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் உள்ள 76 ஆதி திராவிடர் நல கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதிகளுக்கு, துணிகளை துவைப்பதற்கு 76 சலவை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* ஆதி திராவிட மகளிரை உறுப்பினர்களாகக் கொண்ட மகளிர் தொழில் தையல் கூட்டுறவு சங்கங்களுக்கு பழமையான தையல் இயந்திரங்களுக்குப் பதிலாக நவீன தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
* கடலூர் மாவட்டம், கூடுவெளி கிராமத்திலும், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை கிராமத்திலும் இரு தொழில் நுட்பக் கல்லூரிகள் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
* திருவள்ளூர் மாவட்டம், வடகரை ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு தொழிற் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
* 200 ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு சூடான உணவு தயாரித்து பரிமாற வழிவகை செய்யும் வகையில், நீராவி கொதிகலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு இட்லி தயாரித்து வழங்குவதற்காக 1,577 நீராவி இட்லி குக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப்பள்ளிகளில் பயிலும் 1,23,895 மாணவர்களுக்கு 4.93 கோடி ரூபாய் செலவில் உறையுடன் கூடிய தலையணைகள் வழங்கப்பட்டுள்ளன.
* மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு நனையாமல் செல்ல ஏதுவாக அனைத்து மாணவர்களுக்கும் தலா ஒரு மழை கோட்டும், குளிர்காலங்களில் மாணவ, மாணவியரின் உடல்நலத்தை பாதுகாக்கும்  வகையில் அனைவருக்கும் தலா ஒரு கம்பளிச் சட்டையும் வழங்கப்பட்டுள்ளன.

*ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்காக, பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு விடுதிகள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, வேலூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 8 விடுதிகள் என மொத்தம் 10 கல்லூரி விடுதிகள் துவங்கப்பட்டுள்ளன.
*ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியின உண்டி உறைவிடப் பள்ளிகளில்  பயன்பாட்டில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிப்பதற்காக  2.47 கோடி ரூபாய்  வழங்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
* வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள, 16 மாவட்டங்களைச் சேர்ந்த 906 பழங்குடியின பி.எட். பட்டதாரிகளுக்கு அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வழிவகை செய்யும் வகையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிப்பதற்கான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* 160 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும், 100 ஆதி திராவிடர் நல பள்ளிகளுக்கும், ஆக மொத்தம் 260 பள்ளிகளில் 260 நீராவி கொதிகலன்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* 1,314 ஆதி திராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 98,039 மாணவ / மாணவியருக்கு எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* 5 ஆதி திராவிடர் / பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* 15 ஆதி திராவிடர் / பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகள்,  உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* நீலகிரி மாவட்டத்தில் உள்ள 32,873 பழங்குடியினர்கள் பயன்பெறும் வகையில் உதகமண்டலத்தில் உள்ள முத்தோரை
பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மைய வளாகத்தில் மாதிரி உண்டி உறைவிடப்பள்ளி ஒன்று தோற்றுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* பழங்குடியினர் உண்டி உறைவிட, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் பயன்பெறும் வகையில், 26 பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஒரு ளுஅயசவ ஊடயளள சுடிடிஅ அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3. சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை
    
* வன விலங்குகளால் ஏற்படும் உயிர் / பயிர் / உடமைகள் சேதங்களுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன.
*தேக்குமரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ்,   2011-12 ஆண்டு முதல் 2014-15 ஆண்டு வரை  14,335 ஹெக்டேர் பரப்பளவில் தேக்கு மரத் தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* தமிழ்நாட்டின் உயிர்ப்பன்மையைப் பாதுகாக்கவும், பெருமளவிலான பசுமையாக்குதல் திட்டத்தினை செயல்படுத்திடவும், திட்ட மேலாண்மை அலகு அலுவலகத்திற்கான புதிய கட்டடம் நன்மங்கலம் காப்புகாடு பகுதியில் ரூ.6.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு வனத்துறையில் வனவர்,  வனக்காப்பாளர்,  வனக்காவலர் போன்ற பதவிகளில் நேரடி நியமனத்திற்கென ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு வனச்சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம்  என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அந்த அமைப்பினால் பணியாளர்கள் தேர்வு பணி நடைபெற்று வருகின்றது.
* தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தின் பணிகள் மேலும் சிறக்கும் வகையில், 4,500 எக்டேர் பரப்பளவில், மரக்கூழ் தோட்டங்களும், 800 எக்டேர் பரப்பில் உயர் விளைச்சல் ஒட்டு முந்திரி கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளன.
* தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன்பெறும் வண்ணம், தேவாளா, பாண்டியார், குன்னு£ர், சேரன்கோடு மற்றும் நடுவட்டம் கோட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, குடியிருப்பு பகுதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

* மாநிலத்தில் வன உயிரினங்கள் அதிகமாக வாழும் பகுதிகளை இணைத்து, புதிய வன உயிரின சரணாலயங்கள் ஏற்படுத்த முடிவு செய்து, அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவேரி வன உயிரினச் சரணாலயமும், திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயமும், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், கோடியக்கரை வனஉயிரினச் சரணாலயமும், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், கொடைக்கானல் வனஉயிரினச் சரணாலயமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* வனத்துறையில் பணிபுரியும் வனப்பணியாளர்களுக்கு காவல்துறை பணியாளர்களுக்கு இணையாக சீருடைப்படி, சலவைப்படி மற்றும் இடர்படி ஆகியவற்றை வழங்கிட ஆணையிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், 1018 வருவாய் கிராமங்களில் 1.82 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
* தமிழ்நாட்டில் வனங்களின் மேம்பாட்டிற்கும் வன வளங்களைப் பாதுகாத்திடவும்,  2013-14 ஆம் ஆண்டிற்கு, வன பராமரிப்பு பணிகளான, உயிர்ப்பன்மை பாதுகாப்பு, தீத்தடுப்பு மேலாண்மை, போன்ற பணிகள்
34 கோடியே, 89 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ளன.
* மனித-காட்டு யானை மோதல்களினால் எளிதில் பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, 461.44 கி.மீ தூரத்திற்கு யானை புகா அகழிகள்   19 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* சிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல், மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட அலுவலங்களுக்கு சொந்தமாக புதிய அலுவலக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
* தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பணியாளர்களுக்கு வீட்டுக் கடன் பெறும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
* நுண்ணுயிரி மூலம் ஊட்டி ஏரியினை சுத்தப்படுத்துதல், சோலை வனக்காடுகளை மறு உற்பத்தி செய்தல், மன்னார் வளைகுடா பல்லுயிர் பாதுகாப்பகம் மூலம் விழிப்புணர்வுப் பணிகள் மற்றும் இதர திட்டங்கள் 36.67 கோடி ரூபாய் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் உயிர்ப்பன்மை பாதுகாப்பு, தனியார் நிலங்களில் மரங்கள் வளர்த்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு 109.6 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, பிற பணிகளுடன் 1,000 கிராமங்களில் 1.02 கோடி  மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
* 13 வது நிதிக் குழுமத் திட்டத்தின் கீழ், உயிர்ப்பன்மை பாதுகாப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் காடு வளர்ப்பு போன்ற பணிகள் தொடர்ந்து செயல்படுத்த 35.62 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டு, இதுவரையில், 29.93 கோடி ரூபாய்  செலவிடப்பட்டு இத்திட்டம் செயலாக்கப்பட்டுள்ளது.
* வனத்துறையில் பணிபுரியும் 1,439 மிகைப் பணியிட தோட்டக் காவலர்கள் மற்றும் 137 மிகைப் பணியிட வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு இதர வனத்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போல, இடர்படி மாதந்தோறும் தலா 400 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
* திருநெல்வேலி மாவட்டத்தில் உயிர்பன்மை செரிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கி ‘நெல்லை வன உயிரின வனச்சரணாலயம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* விழுப்புரம் மாவட்டத்தில், வானூர் வட்டத்தில் உள்ள  ஓசூடு ஏரிப்பகுதி ‘ஓசூடு பறவைகள் சரணாலயம்’ என ஆக்கப்பட்டுள்ளது.
* ஆனைமலை புலிகள் காப்பகம், அட்டக்கட்டி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு ஆகிய பகுதியிலுள்ள அடிப்படை பயிற்சி மையங்களை, மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
* தமிழ்நாடு வனச் சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் வனவர்/களப்பணி உதவியாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* மனித-வன உயிரின மோதல்களை எதிர்கொள்ளும் வகையில், ஊட்டி, கிருஷ்ணகிரி, மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூன்று அதிவிரைவு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* மரபு வழியாக சந்தன மரங்கள் வளரும் பகுதிகளான ஜவ்வாதுமலை, சேர்வராயன் மலை, கொல்லிமலை, பச்சைமலை மற்றும் சித்தேரி மலைப்பகுதிகளில் சந்தன மரங்களை வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
* மாநிலம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் 25 இடங்களில் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.