12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகாமகம் திருவிழா இன்று தொடக்கம்:விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவு

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகாமகம் திருவிழா இன்று தொடக்கம்:விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவு

சனி, பெப்ரவரி 13,2016,

குரு சிம்மராசியில் இருக்கும் போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2004ம் அண்டு மகாமக விழா நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மகாமகம் விழா கொண்டாடப்படுகிறது.தென்னகத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படும் மகாமக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மகாமக பெருவிழா இன்று (சனிக்கிழமை) பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. அப்போது கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், ஹாளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய சைவ கோவில்களில் கொடியேற்றம் நடைபெறும். மற்ற 6 சைவ கோவில்களில் ஏகதினவிழா நடைபெறும்.
வைணவ கோவில்களான சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகபெருமாள் கோவில்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.45 மணி முதல் 9.45 மணிக்குள் கொடி ஏற்ற நிகழ்ச்சி நடைபெறும்.
மகாமக விழாவின் முக்கிய கோவிலான ஆதிகும்பேஸ்வரர் கோவில் கொடி ஏற்றத்தின் போது தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான், மதுரை ஆதீனம் உள்ளிட்ட மடாதிபதிகளும், பிரமுகர்களும், பக்தர்களும் கலந்துகொள்கிறார்கள். காசிவிஸ்வநாதர் கோவில் கொடி ஏற்றத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள், விஜயேந்திர சரசுவதி சுவாமிகள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

தென்னகத்தின் கும்பமேளா என அழைக்கப்படும் மகாமக பெருவிழா 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிற 22-ந் தேதி  நடைபெறும் தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள். கும்பகோணத்தில் உள்ள மகாமக குளம் மட்டுமின்றி பொற்றாமரை குளம், காவிரிஆறு ஆகிய இடங்களிலும் புனித நீராடல் நடைபெறும்.

கும்பகோணம் மகாமகம் விழா ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல் – அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நேற்று ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், விழாவுக்கு என்னென்ன ஏற்பாடுகள் எந்தெந்த வகையில் செய்யப்பட்டுள்ளன? என்பது பற்றியும், தான் ஏற்கனவே பிறப்பித்த ஆணைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்பது குறித்தும் விரிவாக ஆய்வு நடத்திய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இது தொடர்பாக அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, பி.பழனியப்பன், எஸ்.பி.வேலுமணி, தலைமைச்செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா, டி.ஜி.பி. அசோக் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கே.பணீந்திர ரெட்டி, சுற்றுலாத்துறை, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மா.வீரசண்முக மணி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் 7 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விழாவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களை மகாமக குளத்துக்கு இலவசமாக அழைத்துச் செல்ல 100 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பாதுகாப்பு பணியில் 26 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். 300 கமாண்டோ படையினர் மற்றும் 1,200 தீயணைப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர் கள் நீராடும் மகாமக குளம், பொற்றாமரை குளம், காவிரிஆறு ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வெளிமாநில பக்தர்களும் அதிக அளவில் வருகின்றனர். இதனால் அங்குள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மகாமக விழாவில் 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாமக விழாவிற்காக தமிழக அரசு சுமார் ரூ.200 கோடியில் கும்பகோணத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து உள்ளது.