14 நாடுகளில் முறைகேடாக சொத்துக் குவித்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் மீது தனியார் நாளிதழ் பரபரப்பு குற்றச்சாட்டு:கைது செய்ய ராஜ்யசபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல்

14 நாடுகளில் முறைகேடாக சொத்துக் குவித்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் மீது தனியார் நாளிதழ் பரபரப்பு குற்றச்சாட்டு:கைது செய்ய ராஜ்யசபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல்

புதன், மார்ச் 02,2016,

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பல 1,000 கோடி ரூபாயை முறைகேடாக சம்பாதித்ததாக, Pioneer நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்த பணத்தை, லண்டன், துபாய், தென்னாப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிசர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாகவும் Pioneer நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான அலுவலகத்தில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது இந்த புகாருக்கான ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் கிடைக்கப் பெற்றதாகவும் Pioneer நாளிதழில் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூரில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் நடைபெற்ற பணப்பரிமாற்றங்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு 2ஜி வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே சிங்கப்பூர் அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதையும் அந்த செய்தியில் Pioneer நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும்  கூடியதும், இப்பிரச்னையை எழுப்பிய அதிமுக எம்.பி.க்கள், முறைகேடாக சொத்துக் குவித்துள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

சிதம்பரம் மீதான புகார் குறித்து விவாதிக்க தயார் ஆனால் அதற்கென பின்னர் நேரம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் வெங்கையாவும், சபாநாயகரும் தெரிவித்தனர் . ஆனால் எம்பிக்கள் உடனே விவாதிக்க வேண்டும், கேள்வி நேரத்தை ஒத்திவையுங்கள் என்றனர். இதனையடுத்து ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டது.