ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருக்கும் வரை யாராலும் ஆட்சியையும், கட்சியையும் அசைக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருக்கும் வரை யாராலும் ஆட்சியையும், கட்சியையும் அசைக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆகஸ்ட் 24 , 2017 , வியாழக்கிழமை,

அரியலூர் : ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருக்கும் வரை யாராலும் ஆட்சியையும், கட்சியையும் அசைக்க முடியாது என்று அரியலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அரியலூரில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி எம்.ஜி.ஆர். திருவுருவபடத்தை திறந்து வைத்தார். பிறகு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க அரியலூர் பகுதி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்துள்ளது. இப்போது பல இடங்களில் அரிய கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பாதுகாக்கும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன.தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட நடப்பாண்டு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவுக்கான விருது 4 முறை பெறப்பட்டுள்ளது.

ரூ.2,247 கோடி வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, கல்வியில் இந்த அரசு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கல்வித் துறையில் இருந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது.மருதையாற்றில் கூடுதலாக மேம்பாலம் கட்டப்படும். ஜெயங்கொண்டம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்கப்படும்.தற்போது ஆட்சிக்கும் கட்சிக்கும் சிலர் துரோகம் செய்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆன்மா எங்களுடன் உள்ளவரை கழகத்தையும், ஆட்சியையும் எவராலும் அசைக்க முடியாது. மக்கள் மனதில் இருந்து அகற்றவும் முடியாது.இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக விழாவில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

இந்த விழாவில் என்னுடைய உரை இல்லை என நினைத்திருந்த நேரத்தில், உரை நிகழ்த்த வாய்ப்பை உருவாக்கிய முதல்வர் பழனிசாமிக்கு நன்றி.இந்த ஆட்சியையும், இந்த கட்சியையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சி மற்றும் இயக்கத்தை நமது உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவோம் என சபதம் எடுப்போம் என்றார்.