1984-க்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை என்ற சரித்திரத்தை மாற்றிய முதல்வர் ஜெயலலிதா

1984-க்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை என்ற சரித்திரத்தை மாற்றிய முதல்வர் ஜெயலலிதா

வெள்ளி, மே 20,2016,

தமிழ்நாட்டில் 1977 முதல் 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து எம்.ஜி.ஆர். சாதனை படைத்தார். 1984-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில்அ.தி.மு.க.வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தனது பதவிக்காலம் முடியும் முன்னே 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர். மரணம் அடைந்தார்.

1984-ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தன. எந்த கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி நடத்தியது கிடையாது.

எம்.ஜி.ஆரின் சகாப்தம் முடிந்த பிறகு 1989-ல் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் தலைவர் கருணாநிதி 3-வது முறையாக முதல்-அமைச்சர் ஆனார்.

பின்னர் அவரது ஆட்சி கலைக்கப்பட்டு 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார்.

அதன்பிறகு 1996-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. அதையடுத்து 2001-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.

அதன் பிறகு 2006-ல் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க. வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்தது.

பின்னர் 2011-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இப்போது 2016-ல் நடந்த தேர்தலிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 1984-க்கு பிறகு எந்த ஆட்சியும் தொடர்ந்து நீடித்தது இல்லை என்ற கருத்தை அ.தி.மு.க. உடைத்து நொறுக்கி இருக்கிறது. அந்த சரித்திரத்தை முதல்வர் ஜெயலலிதா மாற்றி எழுதி மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறார்.