முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி 43,051 மையங்கள் மூலம் 66.08 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி 43,051 மையங்கள் மூலம் 66.08 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

திங்கள் , பெப்ரவரி 22,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் தவணையாக 43,051 மையங்கள் மூலம் 66.08 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதனையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்துவழங்கும் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,புதுக்கோட்டையில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார்.

ஏற்கெனவே முதல் தவணையாக ஜனவரி 17 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இரண்டாம் தவணையாக பிப்ரரவி 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும்
70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாநில அளவில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரையில் நடைபெற்றது.
இந்த முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என 43,051 சொட்டு மருந்து மையங்களும், 1,652 நகரும் மையங்களும் அமைக்கப்பட்டது. அதோடு, இப்பணிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
66.08 லட்சம் குழந்தைகள்: இந்தநிலையில் மாநில அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட 66.08 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும், இம்மருந்து வழங்கப்பட்டதன் அடையாளமாக குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது. இது விடுபட்ட குழந்தைகளை எளிதாக அறியும் வகையிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விடுபட்ட குழந்தைகள்: முகாம் நாளில் சொட்டு மருந்து பெற முடியாத குழந்தைகளுக்கு, தங்கள் பகுதியின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் அடுத்து வரும் 2 நாள்கள் தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த வாய்ப்பை தாய்மார்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல், சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். இதுதவிர முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.