2 ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாதிக் பாட்ஷாவை, ஆ.ராசாவின் மைத்துனர் மற்றும் ஜாஃபர் சேட்டுடன் இணைந்து கொலை செய்தேன் : இளைஞர் பரபரப்பு பேட்டி

2 ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாதிக் பாட்ஷாவை, ஆ.ராசாவின் மைத்துனர் மற்றும் ஜாஃபர் சேட்டுடன் இணைந்து கொலை செய்தேன் : இளைஞர் பரபரப்பு பேட்டி

புதன், மே 18,2016,

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாதிக் பாட்ஷாவை, ஆ.ராசாவின் மைத்துனர் மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாஃபர் சேட்டுடன் இணைந்து கொலை செய்ததாக இளைஞர் ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சருமான ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா கடந்த 2011 ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்றிரவு திடீரென செய்தியாளர்களை சந்தித்த, அரியலூர் மாவட்டம், அய்யூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர், தான் “தமிழர் நீதிக்கட்சியின்” தலைவர் சுப.இளவரசனனின் உதவியாளர் என்றும், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருடன் சேர்ந்து சாதிக் பாட்ஷாவை கொலை செய்ததாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த ரகசியத்தை தற்போது வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீஸார் வந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
 அப்போது அவர் கூறியதாவது:
 2011, மார்ச் 16-ம் தேதி ஆ. ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமாரின் அலுவலகத்துக்கு சாதிக்பாட்சா வரவழைக்கப்பட்டார். விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆத்திரத்தில் இருந்த ஐ.ஜி. ஜாபர்சேட் திடீரென சாதிக்பாட்சாவின் கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்கினார். நான் சாதிக்பாட்சாவின் கால்களைப் பிடித்துக்கொண்டேன். அவர் இறந்தவுடன் அவரது வீட்டுக்கு சென்று சாதிக்பாட்சாவை தூக்கில் மாட்டிவிட்டு வந்தோம். இந்த சம்பவத்தில் ரூ. 1 கோடி பேரம் பேசப்பட்டது. அந்த தொகை எனக்கு வந்து சேரவில்லை என்றார்.
 இதையடுத்து, அவரிடம் உளவுத்துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.