21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமரை  முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

சனி, ஜூன் 11,2016,

சென்னை  ; 6  தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றள்ளதையும், அவர்கள் உள்பட 21 தமிழக மீனவர்கள் மற்றும் 92 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம்மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து எந்திரப்படகில் மீன் பிடிக்கச்சென்ற 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர்  கடந்த 9-6-2016 அன்று அதிகாலை பிடித்து தலைமன்னாருக்கு கொண்டு சென்றுள்ளதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தலையும், சித்ரவதையையும் மீனவர்கள் தினமும் சந்திக்கவேண்டியுள்ளது. தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தியில் தங்களது பாரம்பரிய மீன்பிடி நீர் எல்லையில் மீன்பிடிக்கும்போது இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த மாதத்தில் ஏற்கனவே 15 தமிழக மீனவர்கள் இலங்கை காவலில் உள்ளனர். தற்போது இலங்கை வசம் 91 மீன்பிடி படகுகள் உள்ளன. இலங்கை அரசு கடைபிடிக்கும் நிலைப்பாடாக பறிமுதல் செய்த மீன்பிடி படகுகளை விடுவிக்காமல் இருப்பதாகும். இந்த நடவடிக்கை மீனவர்களின்  வாழ்வாதாரத்தை நெரிப்பதாகவும், தமிழக மீனவர்களுக்கு தாங்க முடியாத மனப்புழுக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இந்த விவகாரத்தை தாங்கள், இலங்கை அரசின் உயர் மட்ட அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை நான் வலியுறுத்துவதுடன், மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதிப்படுத்த வேண்டுகிறேன்.

சர்வதேச கடல்சார் எல்லைக்கோடு விவகாரம் (ஐ.எம்.பி.எல்) இந்திய சுப்ரீம்கோர்ட்டில் உள்ளது. கடந்த 1974, 1976-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்ததை எதிர்த்து தமிழக அரசும், நானும் வழக்கு தொடர்ந்துள்ளோம். 1974, 1976-ம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

தற்போது இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள 21 தமிழக மீனவர்களையும், 92 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என  நான்  வேண்டுகோள் விடுக்கிறேன். கடந்த 9-6-2016 அன்று கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது எந்திர படகு உள்பட கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.