234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வென்று புதிய வரலாறு படைக்க வேண்டும் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வென்று  புதிய வரலாறு படைக்க வேண்டும் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

செவ்வாய், பெப்ரவரி 02,2016,

சட்டமன்ற தேர்தலில் புதிய வரலாறு படைக்க வேண்டும் என்றும், 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வென்று காட்ட வேண்டும் என்றும் கட்சியின் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது;

பேரவை மாவட்ட செயலாளர்களாகிய உங்களை எல்லாம் இன்று சந்திப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் மிகுந்த கடமை உணர்வோடு கட்சி வளர்ச்சி நிதியைத் திரட்டி இன்று கொண்டு வந்து கொடுத்ததற்காக என்னுடைய மகிழ்ச்சியையும், பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுக்கெல்லாம் தெரியாதது அல்ல. இப்போது நாம் சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். நாம் புதிய வரலாறு படைக்க வேண்டும் என்பது தான் நம்முடைய லட்சியம். இந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம். மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை; ஐயமும் இல்லை.

எத்தனை இடங்களில் வெல்லப் போகிறோம் என்பது தான் இப்போதைய கேள்வி. என்னுடைய பதில், 234 தொகுதிகளிலும் நாம் வென்று காட்ட வேண்டும். எனவே, மாவட்ட பேரவைச் செயலாளர்கள் அல்லும் பகலும் கண் துஞ்சாது இதற்காகப் பணியாற்றுவீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த வெற்றியை நீங்கள் சாதித்துக்காட்ட வேண்டும் என்பது தான் எனது அன்பு வேண்டுகோள். நிச்சயம் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.