234 தொகுதிகளிலும் சரித்திரம் படைக்கும் வெற்றியுடன்‘முதல்வராக ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏறுவார்’ ‘பட்ஜெட்’ கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேச்சு

234 தொகுதிகளிலும் சரித்திரம் படைக்கும் வெற்றியுடன்‘முதல்வராக ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏறுவார்’ ‘பட்ஜெட்’ கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேச்சு

சனி, பெப்ரவரி 27,2016,

234 தொகுதிகளிலும் வெற்றியுடன் சரித்திரம் படைத்து முதல்-அமைச்சராக ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏறுவார் என்று மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி புகழாரம் சூட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்(2016-17) கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்றக்கூடத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். கமிஷனர் டாக்டர் சந்திரமோகன், துணை மேயர் பா.பென்ஜமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேயர் சைதை துரைசாமி திருக்குறள் வாசித்து காலை 9.35 மணிக்கு கூட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் மேயர் சைதை துரைசாமி தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பெருநகர சென்னை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் கே.சந்தானம் தாக்கல் செய்தார்.

முன்னதாக கூட்டம் தொடங்கியவுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி மேயர் சைதை துரைசாமி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அவர் பேசியதாவது:-

பசியில் உணவு போல் பாசத்தின் உணர்வு போல் பரிதவிக்கும் ஏழையரை அரவணைக்கும் அன்னை போல காலம் தந்த கொடை போல், ஞாலம் காக்கும் படை போல் ஏங்கி நிற்கும் ஏழையரை தாங்கி நிற்கும் வரம் போல் தமிழகம் செழிக்கவே வந்து உதித்த மாமணி முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சரித்திரம் படைத்து சாதனை நிகழ்த்தி மீண்டும் அரியணை ஏறப்போகும் ஜெயலலிதாவுக்கு என் சார்பிலும், துணை மேயர் சார்பிலும், அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் சார்பிலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 23 ஆயிரத்து 474 அலுவலர் மற்றும் ஊழியர்கள் சார்பிலும், பெருநகர சென்னை மாநகராட்சி வாழ் 1 கோடி மக்கள் சார்பிலும் இனிய பிறந்தநாள் வணக்க மலர்களை சமர்பிக்கிறேன்.

அம்மா குடிநீர் திட்டம்

ஜெயலலிதா ‘அம்மா குடிநீர் திட்டம்’ எனும் புதிய திட்டத்தை செயல்படுத்தி ஆணையிட்டுள்ளார். வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்கி பயனடைந்திடும் மினரல் வாட்டரை ஏழை-எளிய மக்களும் பெற்று பயன் பெற வேண்டும் என்ற கருணை உள்ளத்துடன் விலையின்றி அதனை வழங்கிட ஆணையிட்டு, அம்மா குடிநீர் திட்டத்தை செயல்படுத்தும் ஜெயலலிதாவை பெருநகர சென்னை மாநகராட்சி தனது சிரம் தாழ்த்தி வணங்கி பாராட்டுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் முதன்முதலாக நிறைவேற்றினார். தற்போது 50 சதவீதம் ஆக உயர்த்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தனது முந்தைய சாதனையை தானே முறியடித்து, அதற்கும் உயர் அளவான சாதனை படைத்துள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி தனது உளமார்ந்த பாராட்டுகளை தலைவணங்கி தெரிவித்துக்கொள்கிறது.

மாபெரும் சாதனை!

மூத்த குடிமக்களின் மீது தனிப்பரிவும் பாசமும் கொண்டு, அவர்கள் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் கருணை திட்டத்தை தந்த ஜெயலலிதாவுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை பணிவோடு தெரிவித்துகொள்கிறது.

இந்த அறிவிப்பின் மூலம் 2011-ம் ஆண்டில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஜெயலலிதா நிறைவேற்றி காட்டி உள்ளார். இது, எந்த அரசியல் கட்சியும் இதுவரை செய்திடாத மாபெரும் சாதனை ஆகும்.

சென்னையின் சீர்மிகு அடையாளமாக விளங்கி வந்த கலைவாணர் அரங்கத்தை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக இடித்து தரைமட்டமாக்கியது.

எங்கே கலைவாணர் அரங்கம் காணாமல் போய் விடுமோ என்ற திராவிட இயக்கப் பற்றாளர்களின் அச்சத்தை நீக்கி, சீர்மிகுந்த அடையாளத்தை மீட்டெடுத்து அதிநவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமான முறையில் கலைவாணர் அரங்கத்தை மீண்டும் புதிதாக கட்டி திறந்து வைத்த ஜெயலலிதாவுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி தனது உளமார்ந்த பாராட்டுதல்களையும், பணிவான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.