234 தொகுதிகளில் தேமுதிகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும்:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

234 தொகுதிகளில் தேமுதிகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும்:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

வெள்ளி, பெப்ரவரி 19,2016,

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் தேமுதிகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்று அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் கூறினார்.

இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், வி.சி.சந்திரகுமார் அரசின் செயல்பாடுகள் தொடர்பாக வியாழக்கிழமை பேசினார். அதற்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், பி.பழனியப்பன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் குறுக்கிட்டு அவரவர் துறை சார்பில் செய்யப்பட்ட பணிகளைப் பட்டியலிட்டுப் பேசினர். பின்னர் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசும்போது, “அதிமுக இல்லாமல் தேமுதிக சட்டப் பேரவைக்கு வந்திருக்க முடியாது. தேமுதிக உறுப்பினரின் ஈரோடு தொகுதிக்கே பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளோம். அதற்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும்’ என்றார். அதற்கு வி.சி.சந்திரகுமார், “தேமுதிகவால்தான் உங்களால் ஆட்சிக்கு வர முடிந்தது’ என்றார்.
வைத்திலிங்கம்: தேமுதிகவால்தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது என்றால், உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஏன் வெற்றிபெறவில்லை?
நத்தம் விஸ்வநாதன்: உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல, மக்களவைத் தேர்தலிலும் தேமுதிக தோல்விதான் அடைந்தது. மக்களவைத் தேர்தலில் பல கட்சி கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்தார்கள். அப்படியும் தேமுதிகவுக்கு பூஜ்யம்தான் கிடைத்தது. மக்கள் முற்றிலும் தேமுதிகவைப் புறக்கணித்தார்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேமுதிகவை மக்கள் புறக்கணிப்பர். 234-க்கு பூஜ்யம்தான் தேமுதிகவுக்குக் கிடைக்கும். 234-க்கு 234 அதிமுகவுக்குக் கிடைக்கப் போகிறது என்றார்.