234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை ஆதரித்து கிராமங்களில் திண்ணை பிரசாரம் : இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை ஆதரித்து கிராமங்களில் திண்ணை பிரசாரம் : இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி

புதன், மார்ச் 09,2016,

வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை ஆதரித்து கிராமங்களில் திண்ணை பிரசாரம் செய்வோம் என்று தர்மபுரியில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை இந்திய குடியரசு கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தமிழக முதல்–அமைச்சரின் சாதனை திட்டங்கள், ஏழை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் முன்னேறும் வகையில் வழங்கப்பட்ட விலையில்லா திட்டங்கள் குறித்து மக்களிடையே பிரசாரம் செய்வோம். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த பல்வேறு திட்டங்களை கிராமம், கிராமமாக சென்று திண்ணை பிரசாரம் செய்வோம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்ததை போல வருகிற சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. இமாலய வெற்றி பெறும். ஒவ்வொரு குடும்பத்திலும் அ.தி.மு.க. அரசு வழங்கிய ஒரு திட்டமாவது சென்றடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர் கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடித்து அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்–அமைச்சராக பதவி ஏற்பார்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அமைதியாக இருக்கிறது. கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்ததின் மூலம் முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூறுகிறார்கள். கடன் தொகையில் ரூ.90 ஆயிரம் கோடி சொத்தாகத்தான் இருக்கிறதே தவிர தேவையற்ற செலவுகள் செய்யப்படவில்லை. இது தெரியாமல் அவர்கள் மக்களை திசை திருப்பும் வகையில் பொய் பிரசாரம் செய்கின்றனர்.

மக்கள் நலக்கூட்டணி என்பது ஒரு முழுமை பெறாத கூட்டணியாகும். தேர்தல் நெருங்கும்போது தான் இந்த கூட்டணி என்னாகும் என்பது தெரியவரும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை முதல்–அமைச்சர் கொண்டுவந்து அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். இது பாராட்டத்தக்க, வரவேற்க தக்க ஒன்றாகும்.இவ்வாறு செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ., கூறினார்.