234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைக்கும்: 77 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அமைச்சர் பழனியப்பன் பேச்சு

234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைக்கும்: 77 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அமைச்சர் பழனியப்பன் பேச்சு

திங்கட்கிழமை, பிப்ரவரி 22, 2016,

கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 77 ஜோடிகளுக்கு திருமண விழா, கிருஷ்ணகிரி கார்நேசன் திடலில் நேற்று நடந்தது. விழாவுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

அசோக்குமார் எம்பி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, மனோரஞ்சிதம் நாகராஜ் எம்எல்ஏ, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பழனியப்பன், 77 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

மணமக்களை வாழ்த்தி, தமிழக முதல்வர் வாழ்த்து மடல் அனுப்பி உள்ளார். 2011-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில், தமிழக முதல்வர் அளித்த 54 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். பெண்களை மையப்படுத்தியே அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் செயல்படுத்தும் திட்டங்களை பிரதமர் மோடி பாராட்டியதுடன் அதனை பிற மாநிலங்களில் செயல்படுத்த அறிவுரைகள் வழங்கி உள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக வீதிக்கு வராத எதிர்கட்சிகள் தற்போது மாநாடு, பேரணி, ஊர்வலம் நடத்துகின்றன. எதிர்கட்சிகளுக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு தலைமை பொறுப்பு வழங்க, அவரது தந்தை கருணாநிதி தயாராக இல்லை. இதனால் ஸ்டாலின் ஊர், ஊராக நடைபயணம் மேற்கொள்கிறார். அவரது அண்ணன் மு.க.அழகிரியோ, 2016-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும், திமுக வெற்றி பெறாது என கூறி வருகிறார்.

இன்னும் ஒரு வாரத்தில் சட்டபேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டபேரவை தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். 234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.