24,500 துப்புரவு பணியாளர்கள் மூலம் முழுவீச்சில் நடைபெறும் நிவாரணப் பணிகள்:தொற்று நோய் பரவாமல் தடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

24,500 துப்புரவு பணியாளர்கள் மூலம் முழுவீச்சில் நடைபெறும் நிவாரணப் பணிகள்:தொற்று நோய் பரவாமல் தடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

திங்கள் , டிசம்பர் 07,2015,

சென்னை,

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், சென்னையில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றும் பணி 25 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் மூலம் நேற்று தொடங்கியது. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை அளவு குறைந்து காணப்படுவதால், 15 மண்டலங்களிலும் 22,500 சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் 2,000 இதர உள்ளாட்சித்துறை பணியாளர்கள் மூலம் நேற்று காலை தெருக்களை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.

இந்த பணிகளுக்காக 121 சென்னை மாநகராட்சி குப்பை வாகனங்களும், இதர உள்ளாட்சித்துறை மூலமாக வந்த 57 குப்பை வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கவும், தொற்றுநோய்கள் பரவாமல் இருப்பதற்காகவும் 70 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டுள்ளது. 362 கைப்புகை அடிப்பான்கள், 42 எந்திரத்தில் பொருத்தப்பட்ட புகை அடிப்பான்கள் பயன்படுத்தி சுற்றுப்புற சூழ்நிலையை மேம்படுத்தும் பணிகள் செய்வதோடு தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது மழை நீர், வெள்ளம் வடிந்து வருகின்ற நிலையில், சென்னை மாநகராட்சி மூலம் துப்புரவு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் துப்புரவு பணிகள் மண்டல மேற்பார்வை அதிகாரிகளால் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 22,500 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். தற்போது, கூடுதலாக இதர மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 24,500 துப்புரவு பணியாளர்கள் மூலம் குப்பைகள், கழிவுகள் அள்ளும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் குளோரின் பவுடர் மற்றும் பிளீச்சிங் பவுடர் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம், சுற்று வட்டாரப் பகுதிகளில் தினமும் 200 டன் குப்பைகள்அகற்றம்;

இதுகுறித்து தாம்பரம் நகர்மன்றத் தலைவர் கரிகாலன்  கூறியதாவது,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்றும் பணிகளில், 380 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தினமும் 200 டன் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,160 பேர் நகராட்சி, தனியார் பள்ளிகளில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மழைநீர் வடிந்து வருவதால் வீடுகளுக்குத் திரும்பி வரும் மக்கள் வீடுகளைச் சுத்தப்படுத்தி, அவர்கள் வெளியேற்றும் குப்பைகளைத் துப்பரவு ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மக்களுக்கு, லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைநீர் தேக்கத்தால் தொற்று நோய் வராமல் தடுக்க மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தாம்பரத்தில் இயல்புநிலை திரும்பும்வரை அனைத்து துப்புரவு, சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.