25 மீனவர்கள், 119 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

25 மீனவர்கள், 119 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சனி, பிப்ரவரி 04, 2017,

இலங்கையில் உள்ள 25 தமிழக மீனவர்கள் மற்றும் 119 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 2-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். அவர்கள் தற்போது காங்கேசன்துறை சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

பாக் நீரிணை பகுதியில் பாரம் பரியமாக, வரலாற்று உரிமையுடன் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் பணியை இலங்கை தரப்பினர் தொடர்ந்து செய்துவருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இந்தியா – இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லை விவ காரத்தை முடிந்துவிட்டதாக கருதக் கூடாது என தமிழக அரசு தொடர்ந்து கூறிவருகிறது. கடந்த 1974, 1976-ம் ஆண்டுகளில் இந்தியா – இலங்கை இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யுமாறு, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

கடந்த 2015 பிப்ரவரி முதல் இலங்கை அரசு பிடித்த எந்த மீன்பிடி படகையும் இதுவரை விடுவிக்கவில்லை. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். இவ்வாறு கைப்பற்றப்பட்ட 119 படகுகளும் இலங்கை கடற்பகுதியில் தற்போது எவ்வித பாதுகாப்புமின்றி நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கை தலைநகர் கொழும் பில் கடந்த ஜனவரி 1-ம் தேதி நடந்த அமைச்சகங்கள் இடையிலான கூட்டத்தில், படகுகள் விடுவிப்பு குறித்து பரிசீலிப்பதாக இலங்கை அரசு கூறியது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து இலங்கை அரசிடம் பேசி, விரைவில் படகுகளை விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். அந்த படகுகளை உடனடியாக சீரமைத்து மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மீனவர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு திட்டத் துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேட்ட ரூ.1,650 கோடி நிதியை உடனே ஒதுக்க வேண்டும். கடந்த டிசம்பர் 19-ம் தேதி நான் அளித்த மனுவிலும் இதை தெரிவித்துள்ளேன். இது, பாக் நீரிணை பகுதியில் அமைந் துள்ள தமிழக கடலோர மாவட்டங் களில் உள்ள தமிழக மீனவர்களின் நீண்டகால வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். எனவே, மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு தாங்கள் உத்தரவிட்டு, இலங்கை யில் உள்ள 25 மீனவர்கள் மற்றும் 119 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.