27 தமிழக மீனவர்களையும், 71 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்குக் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

27 தமிழக மீனவர்களையும், 71 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :  பிரதமருக்குக் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளி, பெப்ரவரி 12,2016,

இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் உள்பட அந்நாட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 27 பேரையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க, மத்திய வெளியுறவுத்துறைக்கு உத்தரவிட வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இலங்கை வசமுள்ள 71 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர்  ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், தங்களது பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் செயல் தொடர்ந்து நீடித்து வருவது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து 2 இயந்திர படகுகளில் கடந்த 10-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் கொண்டுசெல்லப்பட்டிருப்பது குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவர தாம் இந்தக் கடிதத்தை எழுதியிருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் – பாக் நீரிணைப் பகுதியில், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய உரிமையான மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கு தமது தலைமையிலான தமிழக அரசு உறுதியேற்றுள்ளது- தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைத் தடுக்கும்வகையில், இலங்கை கடற்படை தொடர்ந்து மீனவர்களை கைது செய்தல், தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது- இந்த செயலைத் தடுக்கத் தேவையான முயற்சிகளை இலங்கை அரசுடன் இணைந்து மத்திய அரசு எடுக்க வேண்டியது அவசியம் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் பல்வேறு மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை விடுவிக்காத இலங்கை அரசின் திட்டம், தமிழக மீனவர் சமூகத்தினரிடையே மிகுந்த ஏமாற்றத்தையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக பயன்படுத்தப்படாததாலும், பருவமழை பாதிப்புகளாலும் படகுகள் மிகவும் சேதமடையும் என்பதால், மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை விரைந்து மீட்டு, அவற்றை மத்திய அரசு புதுப்பித்து வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வதேச கடல் எல்லை குறித்த பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்  ஜெயலலிதா, இந்தியா – இலங்கை இடையே 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தக்காலம் செல்லுபடி ஆவது குறித்து தனிப்பட்ட முறையில் தாம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இவ்வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆழ்கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பை மேற்கொள்ள வசதியாக 30 லட்சம் ரூபாய் மானியத்தில், நாட்டிலேயே முதல் முறையாக, தமது தலைமையிலான அரசு ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வாங்கும் சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தி, அத்திட்டம் செயல்பாட்டை தொடங்கவுள்ளது – ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, ஆயிரத்து 520 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவான திட்டமும், ஆழ்கடல் பராமரிப்புக்காக ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் தொடர் மானியமும் மத்திய அரசு வழங்க வேண்டும் தாம் என கோரிக்கை விடுத்துள்ளதை முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு விரைவில் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமரை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ள இந்த மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை காண துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்தப் பிரச்னையில் பிரதமர், தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்றும் முதலமைச்சர்  கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேர் உட்பட இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 27 பேரையும், இலங்கை அரசின் வசமுள்ள 71 மீன்பிடி படகுகளையும் உடனடியாக பத்திரமாக மீட்பதற்கு, இப்பிரச்சனையை இலங்கை அதிகாரிகளிடம் கொண்டுசெல்ல, இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர்  தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.