3 தொகுதிகளிலும்,அ.தி.மு.க.வெற்றி ; தமிழகம் முழுவதும் தொண்டர்களும், பொதுமக்களும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக கொண்டாட்டம்

3 தொகுதிகளிலும்,அ.தி.மு.க.வெற்றி ; தமிழகம் முழுவதும் தொண்டர்களும், பொதுமக்களும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக கொண்டாட்டம்

புதன், நவம்பர் 23,2016,

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் கழக வேட்பாளர்களின் வெற்றியினை, கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் தங்கள் முழு ஆதரவை அளித்துள்ளதாக, கழகத் தொண்டர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

தமிழகத்தில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் கடந்த 19–ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

நேற்று இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தமிழகத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வந்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் கட்சி அலுவலகத்திற்கு ஏராளமான தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் வர ஆரம்பித்தனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிப்புகளை வாங்கி வந்து, வெற்றி கொண்டாட்டத்தை காண வந்தவர்களுக்கும், சாலையில் நடந்து மற்றும் வாகனங்களில் சென்றவர்களுக்கும் இனிப்புகளை வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டாசு வெடிப்பு

அங்கு குவிந்த மகளிர் அணியினர் மற்றும் கட்சி தொண்டர்கள் உற்சாக மிகுதியில் நடனம் ஆடி மகிழ்ந்தனர். அவர்களும் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி ஆனந்த வெள்ளத்தில் தழைத்தனர்.

இவை தவிர, அ.தி.மு.க. தொண்டர்கள் ஆயிரம் வாலா முதல் 10 ஆயிரம் வாலா பட்டாசுகளை வெடித்துக்கொண்டே இருந்தனர். இதனால் அந்த பகுதி அநேக நேரம் பட்டாசு சத்தத்துடனேயே காணப்பட்டது.

பாலால் குளிப்பாட்டினர்

தேர்தல் வெற்றியை கொண்டாட வந்த கட்சி தொண்டர்கள், அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்திருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு குடம், குடமாக பால் அபிஷேகம் செய்து, சிலையை பாலால் குளிப்பாட்டினர்.

அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும்,பொதுமக்களும் தலைமை அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும், நடனமாடியும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.