வெள்ள நிவாரணப் பணி: முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலானதமிழக அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு

வெள்ள நிவாரணப் பணி: முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலானதமிழக அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு

சனி,நவம்பர்,28-2015

கனமழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, துரிதமாகச் செயல்பட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டிருப்பதாக, இம்மாவட்டத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட்ட மத்திய ஆய்வுக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

 

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவினர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர். பண்ருட்டி வட்டம் பெரிய காட்டுப்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக முகாமினை குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் குழுவின் தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசு உத்தரவின்படி, மின்வாரியத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை போன்ற பல்துறை அமைச்சகக்குழு பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.  குழுவினர் சாலை வழியாகச் சென்று சேதப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினோம்.  பெரியகாட்டுப்பாளையம், விசூர் மழையினால் கடும் சேதமடைந்துள்ளது. அதிகமான உயிர் சேதம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழ்நாடு அரசு சிறப்பான முயற்சி எடுத்து சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  வெள்ளத்தால் பாதிக்கப்படாத இடங்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  மாநில அரசின் மறுவாழ்வு பணிக்கு நாங்கள் துணையாக இருப்போம்.  எங்கள் ஆய்வுப் பணி தொடர்ந்து நடைபெறும்.  ஆய்வின் அறிக்கையை வரும் வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் என்றார்.

உடன் மத்தியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார்,  வருவாய்துறை நிர்வாக ஆணையர் அதுல்மிஸ்ரா, வேளாண் உற்பத்தி ஆணையர் ராஜேஷ்லக்கானி உடனிருந்தனர்.