39,545 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி

39,545 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி

வெள்ளி, மே 20,2016,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சிம்லா முத்துசோழனைவிட 39,545 வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்தார்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் சிம்லா முத்துசோழன் களம் இறக்கப்பட்டார். இவர், தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குண பாண்டியனின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வாக்கு எண்ணிக்கையின்போது, தொடக்கத்தில் இருந்தே முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். ஒவ்வொரு சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியானபோது, ஜெயலலிதாவின் வாக்கு வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இறுதியில், 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 1,60,416 வாக்குகள் பெற்று வரலாற்று சாதனை வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தி.மு.க. போட்டியிடாத பட்சத்தில், இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சி.மகேந்திரன் 9,710 வாக்குகள் பெற்று 2–ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுகள் விவரம்

ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:–

மொத்த ஓட்டு – 2,54,498

பதிவானவை – 1,74,076

1.ஜெ.ஜெயலலிதா (அ.தி.மு.க.) – 97,218

2.சிம்லா முத்துசோழன் (தி.மு.க.) – 57,673

3.வி.வசந்தி தேவி (விடுதலை சிறுத்தைகள்) – 4,195

4.பி.ஆக்னேஷ் (பா.ம.க) – 3,011

5.எம்.என்.ராஜா (பா.ஜ.க.) – 2,928

6.ஜி.தேவி (நாம் தமிழர் கட்சி) – 2,513

7.ஜெ.எடின் புரோக் (பகுஜன் சமாஜ்) – 327

 

நோட்டா – 2,873

இதில், அ.தி.மு.க., தி.மு.க. தவிர பிற அரசியல் கட்சி – சுயேச்சை வேட்பாளர்கள் டெபாசிட் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.