4 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை ; முடிவுகள் மாலை 3 மணிக்குள் தெரிந்துவிடும்

4 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை ; முடிவுகள் மாலை 3 மணிக்குள் தெரிந்துவிடும்

செவ்வாய், நவம்பர் 22,2016,

சென்னை : அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து அத்தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இன்று மாலை 3 மணிக்குள் முடிவுகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அரவக்குறிச்சி தொகுதியில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணிக்கை மையமான தளவப்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

தேர்தல் அலுவலர் பூபால்சிங் மன்றால் முன்னிலையில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முழுவதும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையமான குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில், அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, துணை ராணுவப்படை, சிறப்புக் காவல் அதிகாரிகள், மாநகர போலீசார் என மூன்றடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்குள் எண்ணப்படுகிறது. மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு, ஓட்டுகள் எண்ணப்படுகிறது. இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 21 ரவுண்டுகளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில், மூன்றடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இன்றைய தினமே முடிவுகள் தெரியவரும்.