4 மாவட்டங்களுக்கு அதிநவீன பிரச்சார வாகனங்கள்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

4 மாவட்டங்களுக்கு அதிநவீன பிரச்சார வாகனங்கள்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016,

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, திருவாரூர், கோவை புறநகர், ஈரோடு புறநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கழகங்களின் சார்பில் தயார் செய்யப்பட்டிருக்கும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பிரச்சார வாகனங்களின் சாவிகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் புரட்சிகரமான எண்ணற்ற திட்டங்கள் பற்றிய முழுமையான விழிப்புணர்வை பட்டிதொட்டி எங்கும் வாழும் மக்கள் அனைவரும் பெற்றிடும் வகையிலும், ஒளிபரப்பப்படும் படக் காட்சிகளை எந்தக் கோணத்தில் இருந்தும் மக்கள் ஒரே நேரத்தில் துல்லியமாக் கண்டு ஒளி, ஒலிக் காட்சிகள் மூலம் தகவல்களைப் பெறும் வகையிலும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு திருவாரூர், கோவை புறநகர், ஈரோடு புறநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் பிரச்சார வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த பிரச்சார வாகனங்களின் சாவிகளை, கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, நேற்று , திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான திரு. ஆர். காமராஜ், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான திரு. S.P. வேலுமணி,ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், சுற்றுச் சூழல் துறை அமைச்சருமான திரு. தோப்பு N.D. வெங்கடாச்சலம்,புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளரும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான டாக்டர் C. விஜயபாஸ்கர் ஆகியோரிடம் வழங்கினார்.

கழக அரசின் மகத்தான சாதனைகளையும், எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களையும், திருவாரூர், கோவை புறநகர், ஈரோடு புறநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பிரச்சாரப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவுறுத்தி, தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.