43 யானைகளுக்கு 48 நாட்கள் சிறப்பு நல வாழ்வு முகாம் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

43 யானைகளுக்கு 48 நாட்கள் சிறப்பு நல வாழ்வு முகாம் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

புதன்கிழமை , டிசம்பர் 30,

திருக்கோயில்களுக்கும், திருமடங்களுக்கும் சொந்தமான யானைகளுக்கு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில், வரும் 7-ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்திட, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த முகாமில் பங்கேற்கும் தமிழக திருக்கோயில்கள், திருமடங்களுக்குச் சொந்தமான 41 யானைகள், புதுச்சேரியைச் சேர்ந்த 2 யானைகள் என மொத்தம் 43 யானைகளுக்கான மொத்த செலவுத்தொகையான ஒரு கோடியே 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை அரசு ஏற்பதற்கும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இயற்கையின் படைப்பில் உருவாக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிடமும் அன்பு காட்டி அரவணைத்திட வேண்டும் என்பதே நற்சிந்தனையாளர் அனைவரின் கருத்தாகும் – மனிதர்களுக்கு பலவகையிலும் உதவிடும் விலங்குகளிடத்தில் அன்பும் கருணையும் காட்ட வேண்டும் என்பதும் அவற்றுக்கு கொடுமைகள் இழைக்கப்படாமல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம் ஆகும்.

யானைகளை முறையாக பராமரிக்காது சீரற்ற கடினமான தரையில் நிற்க வைப்பதாகவும், போதுமான ஓய்வு அளிப்பதில்லை எனவும் அவைகள் கடுமையாக நடத்தப்படுவதாகவும், முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் கவனத்திற்கு 2003-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா திருக்கோயில்களில் உள்ள யானைகளை, தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தாமல் போதுமான ஓய்வு தரவும், சத்தான உணவளித்து யானைகளை முறையாக பராமரிக்கவும், உடல் நலத்தைப் பேணவும், தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியதோடு, இந்து சமய அறநிலையத்துறை தமிழக வனத்துறையின் ஒத்துழைப்போடு தமிழகத்திலுள்ள திருக்கோயில்களின் யானைகள் மற்றும் தனியார் யானைகளை நீர் வசதி கொண்ட, ஏற்ற சுற்றுச்சூழல் அமைந்த முதுமலை வனவிலங்குச் சரணாலயத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்திடவும் ஆணையிட்டதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2003-ஆம் ஆண்டில் 55 யானைகளுக்கு 30 நாட்களும், 2004 -ஆம் ஆண்டில் 65 யானைகளுக்கு 48 நாட்களும், 2005-ஆம் ஆண்டில் 63 யானைகளுக்கு 48 நாட்களும் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்கள் சிறப்புடன் நடத்தப்பட்டன – இந்த முகாம்களில் பங்கேற்ற யானைகளின் உடல்நலம் பேணப்பட்டு புத்துணர்ச்சி அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது – யானைகளுக்கு புத்திளமை அளிக்கும் சிறப்பு உணவும், மருத்துவ வசதியும் வழங்கப்பட்டது – அவற்றின் உடல் நலமும், மன நலமும் பேணப்பட்டு நலவாழ்வு முகாம் முடிந்து திருக்கோயிலுக்கு அவை திரும்பிச் சென்று புத்துணர்ச்சியோடு தங்கள் பணிகளை மேற்கொண்டன – அத்துடன் யானைகளை அன்புடன் பராமரிக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் எல்லா யானைப் பாகர்களுக்கும் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது – இத்திட்டம் அனைத்து தரப்பினராலும் சிறப்பாக பாராட்டப்பட்டதுடன் இதன் பயன்கள் சமுதாயத்தில் வெகுவாக உணரப்பட்டது.

இந்நலவாழ்வு முகாம் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை நடத்தப்படவில்லை – இதனால் யானைகளின் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து, யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் 2011-2012-ஆம் ஆண்டு திருக்கோயில்களுக்கும், திருமடங்களுக்கும் சொந்தமான 37 யானைகளுக்கு 48 நாட்களுக்கு முதுமலை வன விலங்கு சரணாலயத்தில் ‘யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்’ முதலமைச்சர் ஆணைப்படி நடைபெற்றது.

2012-2013-ஆம் ஆண்டு திருக்கோயில்களுக்கும், திருமடங்களுக்கும் சொந்தமான 34 யானைகளுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேச திருக்கோயிலுக்கு சொந்தமான 1 யானைக்கும் ஆக மொத்தம் 35 யானைகளுக்கு 48 நாட்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் ‘யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்’ முதலமைச்சர் நடைபெற்றது.

2013-2014-ஆம் ஆண்டு திருக்கோயில்களுக்கும், திருமடங்களுக்கும் சொந்தமான 31 யானைகளுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேச திருக்கோயில்களுக்கு சொந்தமான 2 யானைகளுக்கும், நாகூர் தர்காவிற்கு சொந்தமான 1 யானைக்கும், வனத்துறைக்கு சொந்தமான 18 யானைகளுக்கும் ஆக மொத்தம் 52 யானைகளுக்கு 48 நாட்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் ‘யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்’ முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி நடைபெற்றது.

அதே போன்று 2014-2015-ஆம் ஆண்டு திருக்கோயில்களுக்கும், திருமடங்களுக்கும் சொந்தமான 28 யானைகளுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேச திருக்கோயில்களுக்கு சொந்தமான 2 யானைகளுக்கும், ஆக மொத்தம் 30 யானைகளுக்கு 48 நாட்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் ‘யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்’ நடைபெற்றது.

இவ்வாண்டு, திருக்கோயில்களுக்கும் திருமடங்களுக்கும் சொந்தமான 41 யானைகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 2 யானைகள் ஆக மொத்தம் 43 யானைகளுக்கு 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் நாள் முதல் 48 நாட்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் “யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்” நடத்திட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். முகாமில் கலந்து கொள்ள உள்ள யானைகளுக்கான மொத்த செலவுத் தொகை 1 கோடியே 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை அரசு ஏற்பதற்கும் ஆணையிட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகாமிற்கு வர மறுக்கும் யானைகளை வற்புறுத்தி முகாமுக்கு அழைத்துச் செல்ல வேண்டியதில்லை எனவும் நோயுற்று இருக்கும் யானைகளை முகாமிற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும், முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளதோடு, தற்போது இருக்கும் இடத்திலேயே இந்த யானைகளுக்கும் முகாமில் வழங்கப்படுவது போன்ற உணவு, மருத்துவ வசதி ஆகியன வழங்கப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு தேவையான ஆயத்தப் பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு, தகுதியுள்ள யானைகளை தேர்வு செய்து 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் நாள் முதல் பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் வரை கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில் திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு 48 நாட்கள் “யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்” நடைபெறும்.

முகாமிற்கு வர மறுக்கும் யானைகள் நோயுற்று இருக்கும் யானைகள் ஆகியவற்றிற்கு தற்போது அவைகள் இருக்கும் இருப்பிடத்திலேயே முகாமில் வழங்கப்படுவது போன்ற உணவு, மருத்துவ வசதி ஆகியன வழங்கப்படும் – மேலும், இந்த யானைகளை நல்ல முறையில் பராமரித்திட ஏதுவாக யானைகள் பராமரிப்பு குறித்து நன்கு அறிந்த வல்லுநர்களைக் கொண்டு யானைப்பாகர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் இன்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.