48 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

48 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வெள்ளிக்கிழமை, மார்ச் 03, 2017,

சென்னை : இலங்கை சிறையில் உள்ள 48 மீனவர்களையும் பிடித்துவைக்கப்பட்டுள்ள 122 படகுகளையும் விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தின் விவரம் :- தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் இன்னொரு சம்பவத்தை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்திலிருந்து 4 மீனவர்கள், இயந்திரப் படகில் சென்று நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இயந்திரப் படகில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் 13 பேரும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் படகுகளும் இலங்கை காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது.இப்படி தமிழக மீனவர்கள் தொடர்ந்து பிடித்துச் செல்லப்பட்டு கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் குறித்து தமிழக அரசு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளது.

மேலும், பாக். ஜலசந்தியில் இந்தியா-இலங்கை கடல் எல்லை குறித்த சர்வதேச விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 1974-ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையே செய்து கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், பின்னர் ஒரு மனுதாரராக தமிழக அரசும் இணைந்து கொண்டது.
ஆழ்கடல் மீன் பிடி மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.1,650 கோடியை விரைவாக ஒதுக்கவேண்டும் என்றும், இதனால் தமிழக மீனவர்களின் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். கடந்த மாதம் 27 ஆம் தேதி தங்களை நான் நேரில் சந்தித்தபோதும் மீண்டும் இதே கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்தி இருக்கிறேன்.

இலங்கை கடற்படையின் காவலில் 48 மீனவர்கள் உள்ளனர். அவர்கள் வசம் 122 மீன்பிடி படகுகள் உள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீன்பிடி தொழிலே அவர்களின் வாழ்வாதாரம். மீன்பிடி படகுகளை விடுவிப்பதை இலங்கை அரசு பரிசீலிப்பதாகக் கூறினாலும், இது விஷயத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த விஷயத்தை இலங்கை அரசின் உயர் அதிகார அமைப்போடு எடுத்துப்பேசி மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கும் நடவடிக்கைக்கு வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.