48 மணி நேரத்துக்குள் சாதிச்சான்றிதழ் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

48 மணி நேரத்துக்குள் சாதிச்சான்றிதழ் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

ஜூலை ,11 ,2017 ,செவ்வாய்க்கிழமை,

சென்னை : விண்ணப்பித்த 48 மணிநேரத்திற்குள் விரைவு சாதிச்சான்றிதழ்கள் வழங்கும் திட்டம்  மற்றும் 3.50 லட்சம் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கல் உள்ளிட்ட 23 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் நேற்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைமானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  23 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

வீடற்ற ஏழை மக்களுக்கு 2017-2018-ம் நிதியாண்டில் 3.50 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வழங்கப்படும். இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், தீ, சுனாமி மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகளை நீட்டித்து கடல் அரிப்பு, இடி, மின்னல், சுழற்காற்று மற்றும் சூறைக்காற்று ஆகியவற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இனிவரும் காலங்களில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் ஏற்கனவே, பொதுமக்களுக்கு இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வரும் சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்களை தொடர்ந்து மேலும் கீழ்க்கண்ட 15 சான்றிதழ்கள் இணையதள மின் சேவை மூலம் வழங்கப்படும்.

1. விவசாய வருமானச் சான்றிதழ். 
2. சிறு / குறு விவசாயி சான்றிதழ்.
3. கலப்புத் திருமணச் சான்றிதழ்.
4. விதவைச் சான்றிதழ்.
5. வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ்.
6. குடி பெயர்வு சான்றிதழ்.
7. இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி/ கல்லூரி சான்றிதழ்களின் நகல்பெற சான்றிதழ்.
8. ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்.
9.திருமணமாகாதவர் என்பதற்கான சான்றிதழ்.
10. வாரிசு சான்றிதழ்.
11. வசிப்பிடச் சான்றிதழ்.
12. சொத்துமதிப்பு சான்றிதழ்.
13. அடகு வணிகர் உரிமம்.
14.கடன் கொடுப்போர் உரிமம் .
15. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிச் சான்றிதழ் (மைய அரசு) விவசாயிகளின் நலனுக்காக இ-அடங்கல் திட்டம் நடைமுறைபடுத்தப்படும்.

விவசாயிகள் பயிர்க்கடன், பயிர்காப்பீடு, இழப்பீடு நிவாரணம் ஆகிய தேவைகளுக்கு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது இணையதளத்திலிருந்து நேரடியாகவோ அடங்கல் நகலினை பதிவிறக்கம் செய்து பயன்பெற இந்த இ-அடங்கல் முறை பெரிதும் உதவும். அடங்கல் தொடர்பான விவரங்களை பார்வையிடுவதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால் பதிவிறக்கம் செய்ய சிறுகட்டணம் நிர்ணயிக்கப்படும்.

எனவே, கிராம நிர்வாக அலுவலர்கள் பயிர்சாகுபடி குறித்த விவரங்களை பதிவு செய்யும் பணியானது இத்திட்டத்தின் மூலம் எளிமையாக்கப்படுவதால், அவர்கள் பணித்திறன் மேம்படுவதோடு அவர்களது பணிச்சுவையும் இனிவரும் காலங்களில் வெகுவாக குறையும். விவசாயிகள் இணையதளத்தின் மூலம் ஒத்திசைவு செய்யப்பட்ட அடங்கல் குறித்த பதிவு விவரங்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் எளிமையாகவும், விரைவாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சாதி சான்றிதழ்களை பொதுமக்களும் குறிப்பாக பள்ளி மாணவர்களும் மேலும் விரைவாகவும் எளிதாகவும் பெறவேண்டும், என்ற நோக்கில் முதற்கட்டமாக தற்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்ட்ட வகுப்பினை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களின் குடும்பத்தில் எவரேனும் ஏற்கனவே இணையவழி மின்னனு சேவை மூலமாக சாதிச்சான்று பெற்றிருப்பின் அதன் விவரத்துடன் இ-சேவை மையங்கள் மூலமாக விரைவுச் சேவை கட்டணமாக ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கும் பட்சத்தில் விண்ணப்பித்த நேரத்திலிருந்து 48 மணிநேரத்திற்குள் (விடுமுறை தினங்கள் நீங்கலாக) சாதிச்சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது அறிவிப்புகளில் தெரிவித்துள்ளார்.