5 ஆண்டுகளில் ரூ.91,210 கோடிக்கு புதிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளது: அமைச்சர் ப.மோகன் தகவல்

5 ஆண்டுகளில் ரூ.91,210 கோடிக்கு புதிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளது: அமைச்சர் ப.மோகன் தகவல்

செவ்வாய், மார்ச் 01,2016,

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையில் 5 ஆண்டுகளில் ரூ.91,210 கோடிக்கு புதிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என தொழிலாளர் நலன், பால் வளத்துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.

மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி, அரசு மானியம் வழங்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், உதவிகளை வழங்கி, மோகன் பேசியதாவது:

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.91,210 கோடிக்கு புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை, 22,169 நிறுவனங்களுக்கு ரூ.463.74 கோடிக்கு முதலீட்டு மானியம், மின் கட்டண மானியம் உள்ளிட்ட பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையில் 10,073 தொழில் முனைவோர் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.16,532.67 கோடிக்கு முதலீடு செய்வதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இவற்றில் ரூ.1,648.96 கோடி முதலீட்டில், 2,151 தொழில் முனைவோர்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளனர்.

4,734 பயனாளிகளுக்கு ரூ.109.48 கோடி திட்ட மதிப்பீட்டில் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை விரைவாக செயல்படுத்த ரூ.10 கோடி அளவுக்கு அரசு மானியம் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை மாவட்டத்தில், 220 பயனாளிகளுக்கு ரூ.127.11 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கடன் ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசு மானியம் ரூ.31.78 லட்சம் ஆகும். ஒப்புதல் ஆணை பெற்றவர்களில், 140 பயனாளிகளுக்கு ரூ.69.88 லட்சம் திட்ட மதிப்புக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி பெறும் இளைஞர்கள், எந்த நோக்கத்துக்காக கடனுதவி பெறுகிறார்களோ அந்தத் தொழில்களில் முதலீடு செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

விழாவில் சமூக நலம், சத்துணவு துறை அமைச்சர் பா.வளர்மதி, சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமை செயலர் ஜக்மோகன் சிங் ராஜு, கூடுதல் தலைமை செயலாளர் அம்புஜ் சர்மா, சென்னை மாவட்ட ஆட்சியர் ஜி.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.