5 ஆண்டுகளில் ஆயிரத்து 599 பாலங்களை திறந்துவைத்துள்ளார் முதலமைச்சர் ஜெயலலிதா – சட்டப்பேரவையில் எடப்பாடி கே. பழனிச்சாமி தகவல்

5 ஆண்டுகளில் ஆயிரத்து 599 பாலங்களை திறந்துவைத்துள்ளார் முதலமைச்சர் ஜெயலலிதா – சட்டப்பேரவையில் எடப்பாடி கே. பழனிச்சாமி தகவல்

ஞாயிறு, பெப்ரவரி 21,2016,

முந்தைய தி.மு.க. மைனாரிட்டி ஆட்சியைவிட, நீதித்துறைக்கு 451 கோடி ரூபாய் அளவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 602 கோடி ரூபாய் மதிப்பில் 15,313 அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில், உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, கடந்த 5 ஆண்டுகாலத்தில், ஆயிரத்து 599 சிறிய மற்றும் பெரிய பாலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 7,925 புள்ளி இரண்டு ஒன்பது கிலோமீட்டர் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. S.P. வேலுமணி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில்தான், ஏழை மக்களுக்கும் விரைந்து நீதி கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில், மாநிலம் முழுவதும் 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 214 புதிய நீதிமன்றங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் திருமதி. பா.வளர்மதி, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, 5 ஆண்டுகளில் 15 ஆயிரத்து 313 அங்கன்வாடி மையங்களுக்கு சுமார் 602 கோடி ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்களை கட்டிக் கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.