வெள்ளப் பகுதிகளைச் சீரமைக்க ரூ.4,500 கோடி,வீடுகள் கட்டித் தர ரூ.5,000 கோடி வழங்க மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

திங்கள் , டிசம்பர் 14,2015,

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், குடிநீர் குழாய்கள், மழைநீர் வடிகால் அமைப்புகள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.4,500 கோடி நிதி தேவை என மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.மேலும் ,அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் வசித்து வந்த 50 ஆயிரம் குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் கட்டித் தர ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என்று தன்னை சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வெள்ளப் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளப் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் முதல்வர் ஜெயலலிதா எடுத்துரைத்தார்.
டிசம்பர் முதல் தேதியில் அதிக கன மழை பெய்ததோடு, ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பிச்சாட்டூர் அணை, கிருஷ்ணாபுரம் அணை ஆகியவற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் விளக்கினார்.
இதனால் சாலைகள், பாலங்கள், குடிநீர் விநியோக அமைப்புகள், மின் விநியோக அமைப்புகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும், மிகப் பெரிய வெள்ளப் பாதிப்பின் காரணமாக மத்திய அரசிடமிருந்து நிதியுதவியும், நிவாரண உதவிகளும் தேவைப்படுகிறது குறித்து முதல்வர் விளக்கினார்.
ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை உள்ளிட்ட படைகளால் இதுவரை 18 லட்சத்து 94 ஆயிரத்து 538 பேர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடரிலிருந்து மீள்வதற்கு தனியான நிவாரணத் திட்டங்கள் தேவைப்படுவது குறித்தும் முதல்வர் விளக்கினார்.
குடிசை வாழ் மக்களுக்கு வீடு வழங்க சிறப்புத் திட்டம்:
அடையாறு, கூவம் நதிக் கரையோரங்களிலும், பக்கிங்காம் கால்வாயின் கரையிலும் வசிக்கும் குடிசைப்பகுதி மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அமைச்சருக்கு முதல்வர் விளக்கினார்.
ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு வேறு இடங்களில் குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் மத்திய அமைச்சரிடம் முதல்வர் எடுத்துரைத்தார்.
இந்தக் குடும்பங்களுக்கு வீட்டு வசதியை வழங்க ரூ.5 ஆயிரம் கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது. மிகப்பெரிய வெள்ளப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்துக்கு மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற ஏழ்மையை அகற்றும் துறையின் கீழ் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வீடுகளுக்கு ரூ. 750 கோடி:
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சென்னையில் குடிசைகளில் வசிக்கும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.750 கோடியை ஒதுக்கீடு செய்ய செய்ய வேண்டும்.
இந்த நிரந்தர வீடுகளுக்கு மத்திய அரசு ரூ.1.5 லட்சமும், மாநில அரசு ரூ.1 லட்சமும் வழங்கும். மொத்தம் ரூ.2.5 லட்சத்தில் நிரந்தர வீடுகள் கட்டப்படும்.
அதேபோல், இந்த வெள்ளத்தால் நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகள், குடிநீர், கழிவுநீர் கட்டமைப்புகள், வெள்ள நீர் வடிகால் அமைப்புகளுக்கு மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய சென்னை மாநகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,500 கோடி தேவை என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த உள்ளாட்சி அமைப்புகள் கடுமையான இழப்புகளைச் சந்தித்துள்ளதால் சிறப்பு நிதியாக ரூ.4,500 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரை ரூ.3,770 கோடியில் விரிவுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தமிழகம் சந்தித்த இழப்புகளுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார். சென்னையில் நீர்வழித்தடங்களின் ஓரம் குடியிருப்போருக்காக இப்போதுள்ள திட்டங்களின் கீழ் மிகப்பெரிய அளவில் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியாது என்பதால், தமிழகத்துக்கு என சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு ஒப்புதல்: சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது நிதி அமைச்சகத்தின் பொது நிதித்துறை வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.