500 மதுக்கடைகள் மூடல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

500 மதுக்கடைகள் மூடல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21, 2017,

சென்னை ; மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் ,ஏழை கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நிதியாக ரூ.18,000 வழங்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும், 50 சதவீத மானியத்தில் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கையெழுத்திட்டார்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி நேற்று பகல் 12.30 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.  முன்னதாக அவரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 500 டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா இரு சக்கர வாகனம் திட்டம், மகப்பேறு நிதியுதவி உயர்வு, மீனவர்களுக்கு வீட்டு வசதி திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு ஆகிய 5 அறிவிப்புகள் கொண்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். தேர்தல் வாக்குறுதியின்படி இத்திட்டங்களை நிறைவேற்றுவதாக முதல்வர் தெரிவித்தார். 

5 அறிவிப்புகள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

மகளிர், பணியிடங்களுக்கும் பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்க ஐம்பது சதவீத மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க ஐம்பது சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 20,000 வழங்கப்படும். மகளிரின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை வைத்திருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக இத்திட்டம் ‘அம்மா இரு சக்கர வாகனம் திட்டம்’ என அழைக்கப்படும். ஆண்டொன்றுக்கு, சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசுசெயல்படுத்தும்.

ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, 1.6.2011 முதல் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முன்னாள் முதல்வர் ஆணையிட்டிருந்தார். உலக நாடுகளின் நிலையையொத்த பேறு கால குறியீடுகளை தமிழ்நாடு அடையும் பொருட்டும், பேறு கால தாய் சேய் இறப்பு விகிதத்தினை மேலும் குறைக்கும் பொருட்டும், 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 6 லட்சம் தாய்மார்கள் பயனடைவர். ஆண்டொன்றுக்கு 360 கோடி ரூபாய் கூடுதல் செலவில் இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.

தேர்தல் அறிக்கையில், மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் மீனவர்களுக்கான தனி வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். 85 கோடி ரூபாய் செலவினத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 100லிருந்து ரூபாய் 200 ஆக உயர்த்தியும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 150லிருந்து ரூபாய் 300ஆக உயர்த்தியும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 200லிருந்து ரூபாய் 400 ஆக உயர்த்தியும், பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 300லிருந்து ரூபாய் 600 ஆகவும் உயர்த்தியும் ஆணையிடப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தற்போது உதவித்தொகை பெற்று வரும் 55,228 இளைஞர்கள் உயர்த்தப்பட்ட உதவித் தொகை பெற்று பயன் பெறுவர். இத்திட்டத்தை செயல்படுத்துவதனால் தமிழ் நாடு அரசுக்கு ஆண்டொன்றுக்கு 31 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.

மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 500 மதுபானக் கடைகளை மூடியும், மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தும் 24.5.2016 அன்று அப்போதைய முதல்வர் ஆணையிட்டார். மேற்கண்ட கொள்கையினை முன்னெடுத்து செல்லும் வகையில், தமிழ்நாட்டில் மேலும் 500 மதுபானக் கடைகள் மூடுவதற்கான ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.